82வது வெனிஸ் திரைப்பட விழா கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் தொடங்கி இம்மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இதாலியில் உள்ள வெனிஸ் நகரத்தில் நடந்த இந்த விழாவில் சிறந்த இயக்குநருக்கான கோல்டன் லயன் விருதை ஜிம் ஜார்முஷின் ‘ஃபாதர் மதர் சிஸ்டர் பிரதர்’ படம் வென்றது. இந்த படம் திரையிட்ட பின்பு பார்வையாளர்கள் மத்தியில் 6 நிமிடங்கள் கைதட்டல் பெற்றிருந்தது. இந்த படம் மூன்று வெவ்வேறு குடும்பங்களின் மூன்று கதைகளை விவரிக்கிறது. குறிப்பாக உடன் பிறந்தவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.
இதையடுத்து சில்வர் லயனுக்கான விருதை காசா படமான ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ படம் வென்றுள்ளது. இந்த படம் தான் முதல் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் திரையிடப்பட்ட பின்பு பார்வையாளர்கள் 6 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டினர். இது இந்த விழாவின் அதிகப்படியான பெற்ற கைதட்டல் என ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இப்படம் இஸ்ரேல் படைகளால் 5 வயது பாலஸ்தீன சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் பற்றி பேசுகிறது. இப்படத்தை கவுதர் பென் ஹனியா இயக்கியுள்ளார். இதில் அச்சிறுமி மீட்பு அமைப்பிடம் போனில் உதவி கேட்ட ஆடியோ இடம்பெற்றுள்ளது. இது பார்வையாளர்களைக் கண்கலங்க வைத்தது. இதற்கு முன்பு பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட போது அந்த மழலையின் குரல் பார்வையாளர்களை மன உருகச் செய்தது. இந்த கொல்லப்பட்ட சம்பவம் 2024ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.