
ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாகத் திருவண்ணாமலையில் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் சொல்லி குறைகளை கேட்டறிந்தனர்.
இதையடுத்து புயல், வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கிட தமிழ அரசு உத்தரவிட்டது. மேலும் அதி கனமழை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் கடலூர் பகுதியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இயக்குநர் தங்கர் பச்சன் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “இங்கு வந்த அரசியல் தலைவர்கள் அதிகாரிகளுடன் வந்து பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். அவர்களுக்கு இந்த ஊரை பற்றி தெரியாது. என்ன பிரச்சனை என்பதும் தெரியாது. அதிகாரிகள் எங்கு கொண்டு போய் நிறுத்துகிறார்களோ அங்கே நின்றுகொண்டு சென்றுவிடுகின்றனர். அது ஒரு சினிமா படப்பிடிப்பு போல் இருக்கிறது.
மத்திய அரசிடம் நிவாரணம் வாங்கி தமிழக அரசு என்ன செய்கிறது. நிவாரணம் என்பது இரண்டாயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து விடுவதோடு முடிவது அல்ல. பெரியாரோட புகைப்படத்தையும் அண்ணாவுடைய புகைப்படத்தையும் வைத்து கொண்டு காலம் காலமாக நீங்கள் ஆத்து மணலையும் மலைகளை வெட்டியும் ஏரி குலங்களையும் திருடுகிறீர்கள். இது எவ்வளவு காலத்துக்கு தொடரப் போகிறது. தயவு செய்து மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றிவிடாதீர்கள். இதுக்கு ஒரு நிரந்தர தீர்வை கொண்டு வாருங்கள்” என்றார்.