Advertisment

“பா.ம.க-வை எப்படி சாதி கட்சின்னு சொல்லுவீங்க” - கொதித்தெழுந்த தங்கர் பச்சன்

thankar bachan about pmk

Advertisment

அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஈ5 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை தங்கர் பச்சன் வழங்குகிறர். இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் நாளை(05.06.2025) திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்களின் காட்சி நேற்று சென்னையில் ஒரு பிரசாத் லேபில் நடைபெற்றது. இக்காட்சி முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த படக்குழு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது படம் தொடர்பான ஒரு கேள்விக்கு, பதிலளித்த இயக்குநர், இப்படம் ஆத்திகமும் பேசவில்லை, நாத்தீகமும் பேசவில்லை, பகுத்தறிவு தான் பேசுகிறது என்றார். அவரிடம் ஒரு செய்தியாளர், சாதிக்கு எதிராக பேசும் நீங்கள் சாதி கட்சியில் வேட்பாளராக நின்ற ஒருவரின் பையனை நடிகராகத் தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, இயக்குநர் இந்த படம் ஆரம்பிக்கும் போது நடிகரின் அப்பா சீட்டெல்லாம் வாங்கவில்லை என்று பதில் சொல்லிக்கொண்டிருக்க அருகில் இருந்த தங்கர் பச்சன் உடனே கோபப்பட்டு இயக்குநரை சற்று பின்னே தள்ளிவிட்டு பதில் சொல்ல முன்வந்தார்.

முன்வந்த பின், கேள்வி கேட்ட செய்தியாளரின் பெயரைக் கேட்டு, “தமிழ்நாட்டில் சாதி பார்க்காமல் வேட்பாளரை நிறுத்தும் கட்சி ஒன்றை சொல்லுங்கள்” என்றார். அதற்கு அந்த செய்தியாளர் நாம் தமிழர் கட்சி ஒன்று இருக்கிறது என பதில் கூற அந்த கட்சி தொடங்கின பிறகு தான் உங்களுக்கு தெரியும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், “பா.ம.க. சாதி கட்சின்னு எப்படி சொல்வீங்க” என்று கேட்க செய்தியாளருக்கும் அவருக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு இயக்குநர் தாமாக முன்வந்து பதில் சொல்கிறேன் என சொல்லி, “படத்தின் ஹீரோவான விஜித், நண்பரின் மூலமாகத்தான் தெரியும். அவரை சந்திப்பதற்கு முன் அவர் தங்கர் பச்சனின் மகன் என எனக்கு தெரியாது. ஒரு தமிழ் முகம் தேவைப்பட்டது, அதற்கு அவர் சரியாக இருந்தார். அதனால் அவரை தேர்ந்தெடுத்தேன். சினிமாவுக்கு சாதி இல்லை” என்றார்.

Advertisment

பின்பு பேசிய தங்கர் பச்சன், “நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்தது. இந்த படம் தொடங்கப்பட்டது எப்போது தெரியுமா. அதற்கு முன்னாடி நான் பா.ம.க.வில் உறுப்பினரும் கிடையாது. அந்த கட்சி அலுவலகம் எங்க இருக்குன்னே தெரியாது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “2003ஆம் ஆண்டு அருகில் உள்ள 70 எம்.எம். தியேட்டரில் தமிழக அளவில் இருக்கும் 166 பறை இசை கலைஞர்களை 8 பேருந்துகளில் அழைத்து வந்து ‘புத்தப் புது பாட்டு வந்தா தாண்டவக்கோனே’ பாடலுக்கு நேரடி ஒலிப்பதிவு பண்ணேன். அந்த பாடலின் ஆறு நிமிடங்கள் பறை இசை கலைஞனின் சாதிய ஒடுக்குமுறையை சொல்லும் ஒரு குறும்படம்.

அந்த பாடலை தவிர்த்து அந்த படம் முழுக்க தலித்துகளுக்கான பிரச்சனைகளை நான் பேசியிருக்கேன். என்னுடைய படங்களை எடுத்து பாருங்க. நீங்க சாதாரணமா சாதி கட்சியிலநின்னேன்னு சொல்றீங்க. ராமதாஸ், அன்புமணியை விட அரசியல் பேசுறவங்க இங்கு யார் இருக்காங்க. 6 இட ஒதுக்கீடுகளை இந்தியாவிற்கு பெற்று தந்தவர் ராமதாஸ். சொந்த சாதிக்கா வாங்கி கொடுத்தார். அதை எல்லாரும் அனுபவக்கிறீங்கல்ல... அவரை எப்படி சாதி கட்சி தலைவர்னு சொல்வீங்க. அவர் சாதி கட்சி தலைவர்னா, அவர் வாங்கி கொடுத்த இட ஒதுக்கீட்டை நாங்க அனுபவிக்க மாட்டோம்னு சொல்லுங்க. கடந்த 80 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர்களில் அன்புமணியை தவிர்த்து வேறுயாராவது ஒரு பெயர் தெரியுமா. சுற்றுசூழல் உள்ளிட்ட நிறைய பிரச்சனையை அவங்க பேசியிருக்காங்க. அதனால பா.ம.க-வை சாதி கட்சின்னு யாரும் பேசக்கூடாது. நான் அடிப்படையில் ஒரு பொதுவான கலைஞன் அந்த கண்ணோட்டத்தில் என்னை பாருங்கள்” என்றார்.

pmk Thankar Bachan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe