Advertisment

''தூக்கமில்லாமல் அமைதியற்ற மனநிலையில்தான் இதை எழுதுகிறேன்!'' - தங்கர் பச்சான் குமுறல்!

khk

கரோனா அச்சுறுத்தலால் பல லட்சம் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகவே சென்னையில் கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதிய நிலையில் இதுகுறித்து இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

Advertisment

குடி ஆட்சி -கொலை ஆட்சி!

விடிய விடிய உறக்கத்தை இழந்து அமைதியற்ற மனநிலையில்தான் இதை எழுத அமர்கிறேன். தேர்தல் முடிந்துவாக்கு எண்ணிக்கை அறிவிப்பின்போது எதிர்கொள்ளும் பரபரப்பான பதட்டமான மனநிலையில்தான் ஊடகச் செய்திகளைப் பார்க்கிறேன். உலக நாடுகளும், உலக சுகாதார நிறுவனமும், மருத்துவத்துறை வல்லுனர்களும் கூட கோவிட்- 19தொற்று நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து நமது அரசைப் பாராட்டி வரவேற்றார்கள். இந்நிலையில்தான் கோயம்பேடு காய் கனி வளாகம் தொற்று பரப்பும் மையமாக மாற்றம் கண்டு அனைவரும் அதிர்ந்து கிடக்கின்றோம்! மதுக்கடைகளைத் திறக்கிறார்கள் எனும் செய்தி வெளியான போது பதட்டம் மேலும் அதிகமானது. இப்போது நீதிமன்றம் கட்டுப்பாடு நிபந்தனைகளை விதித்து கடை திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் மீறப்படும் போதுமீதம் இருப்பவர்களுக்கும் மதுக்கடைகள்கிருமியைக் கொண்டு சேர்த்துவிடுமே எனும் கவலை அனைவரையும் சோர்வடையச் செய்திருக்கிறது.

Advertisment

இதிலிருந்து மீண்டு விடலாம் என43நாட்கள் குடிக்காமல்தான் மக்கள் இருந்தார்கள். ஆனால் அரசாங்கத்தால்தான் மதுக்கடை திறக்காமல் இருக்க முடியவில்லை. எல்லையில் கடை திறந்து விட்டார்கள் எனக் காரணம் கூறி பழியை மக்களிடத்தில் போடுகிறது. இன்னும் மூன்று மாதங்கள் மதுக்கடைகளை மூடி வைத்திருந்தால் குடியை மறந்து, வருமானம் முற்றிலுமாக நின்றுவிடும் என்று நினைத்து இப்போது திறக்கிறார்களோ எனும் எண்ணம் எழுகிறது! நான் சிறுவனாக இருந்தபோது அரசாங்கத்திற்குத் தெரியாமல் சாராயம் காய்ச்சி விற்பவர்களைக் கைகளைக்கட்டி தலையில் குடத்தை வைத்து வீதி வீதியாக அடித்து இழுத்துக் கொண்டு போவதைப் பல முறை பார்த்திருக்கிறேன். அதைப்போல் அதை வாங்கிக் குடிப்பவர்களுக்கும் அடி உதை சிறை தண்டனை எல்லாம் உண்டு. ஆனால் இந்த40ஆண்டுகளுக்குள் சாராயம் விற்கின்ற வேலையை அரசாங்கமே செய்வதால் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் எல்லாம் குடிக்கத்தொடங்கி அடிமையாகி அலைகிறார்கள். மக்களைக் காக்க வேண்டியவர்கள் இந்தப் பேரழிவு காலத்தில் கூட இப்படிச் செய்யலாமா எனக்கேட்டால் ‘ஆட்சி நடத்த பணம் இல்லை, அதற்காகத்தான் மதுக்கடைகளைத் திறக்கிறோம்’ எனச் சொல்வது எவ்வளவு பெரிய கேடு விளைவிக்கும் அவமானத்திற்குரிய செயல்?

'மக்களை வாழ வைப்பதற்காகவேதான் அரசியலுக்கு வருகிறேன்! என் வாழ்க்கையைத் தியாகம் செய்கிறேன்!' எனகூறிவிட்டு அரசியலுக்குள் நுழைந்து ஊழலை அறிமுகப்படுத்தினார்கள். தான் மட்டும் திருடினால்தானே கேள்விகள் கேட்பார்கள் என்பதற்காக தன் கீழ் உள்ள அமைச்சர்கள்,சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கடைநிலை வரை உள்ள கட்சிக்காரர்கள்,அதிகாரிகள்,அரசு ஊழியர்கள் என அனைவரையும் ஊழல் செய்ய அனுமதித்தார்கள். இந்தத் திருடர்கள் பணக்காரர்களாக மாறுவதைக் கண்ட மக்கள், கேள்வி கேட்கத் தொடங்கியபோது,அவர்களின் வாயையும் அடைப்பதற்காகவே பணம் கொடுத்து வாக்குரிமையை விலைக்கு வாங்கி தங்களின் திருட்டை நியாயப்படுத்திக் கொண்டார்கள். இந்நிலையில் யார் யாரைப்பார்த்து கேள்வி கேட்க முடியும்?அரசியலுக்குள் நுழையும்போது கடந்த காலங்களில் அவர்கள் எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் எவ்வளவு சொத்து வைத்திருந்தார்கள் என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியாமல் இல்லை. அனைத்துத் தொழில்களையும் ஒழித்துவிட்டு அரசியல் தொழில் மட்டுமே இன்றைக்குக் கொடி கட்டி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்பதுமக்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான். வாழ்வாதாரத்தை இழந்து வருமானத்தை இழந்து மூன்று வேளை உணவை இரண்டு வேளையாகச் சுருக்கி, இருப்பதைக்கொண்டு ஊரடங்கில் உயிர் வாழும் மக்களிடமே நன்கொடை கேட்கும் அரசாங்கத்தை உலகத்தில் எங்கேயாவது கண்டிருக்க முடியுமா?

உயிர் பற்றிய கவலையை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஐந்து கிலோ அரிசிக்காக அதிகாலையே வந்து வரிசையில் இடம்பிடித்துக் காத்திருக்கிற மக்களைப் பார்த்தபிறகும் கூட எவ்வாறு ஈவு இரக்கமில்லாமல் இவ்வாறு செயல்பட முடிகிறது?!ஒரே இரவில் பணமதிப்பிழப்பு சட்டத்தை உருவாக்கி மக்களின் சேமிப்பையெல்லாம் எடுத்துக் கொண்டவர்களுக்குத் தேவைக்குஅதிகமான பணமும்,மக்களிடமிருந்து ஊழல் செய்து திருடிக் கொள்ளையடித்த பணமும் எங்கெங்கே இருக்கிறது எனத் தெரியாதா?அவற்றையெல்லாம் அதே மாதிரி ஒரு சட்டம் இயற்றி பிடுங்கினால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு மக்களிடமிருந்து வரி வாங்காமலேயே சிறப்பான ஆட்சி நடத்தலாமே! மக்கள் பணம்68ஆயிரம் கோடியைப் பணக்கார முதலாளிகளுக்குக் கடனாகக் கொடுத்துவிட்டு அந்த கடனை ஒரே அறிவிப்பில் தள்ளுபடி செய்து அதற்குக் காரணமும் கூறுபவர்களை எந்த அரசியல்வாதிகளும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லையே!கல்விச்செலவுக்காக சிறுமி சேர்த்து வைத்திருந்த உண்டியலை உடைத்து நன்கொடை கொடுத்ததைதலைப்புச் செய்தியாக்கி நாட்டுப்பற்றை விதைக்க முனைகின்றவர்களின் செயல்கள் எவ்வளவு அவமானத்திற்குரியவை?

வருவாய் குறைந்து விட்டதற்காக முதலில் ஆந்திர அரசு தனது ஊழியர்களுக்கு இனி பாதித்தொகை மட்டுமே மாத ஊதியம் என அறிவித்தது. அதைப் பின்பற்றி ராஜஸ்தான்,ஒடிசா போன்ற மாநிலங்களும் அறிவித்தன. ஏற்கனவே ஜிஎஸ்டி பணம் மாநிலங்களுக்கு இல்லாமல் மத்திய அரசுக்குச் சென்று விட்டது. அத்துடன் மத்திய அரசுஅறிவித்த குறைந்த அளவிலானகோவிட்- 19உதவித்தொகையும் கூட முறையாக இன்னும் வந்து சேரவில்லை என்பதால் தமிழக அரசு பணப்பற்றாக்குறையால் திண்டாடுகிறது என்பதையும் தமிழகமக்கள் நன்கு அறிவார்கள். வேறு வழியில்லாதஇந்த இக்கட்டான நிலையில் பிற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் ஊழியர்களுக்கான மாத ஊதியத் தொகையை ஏன் பாதியாக அறிவிக்கத் தயங்குகிறது என்பது புரியவில்லை. தேவைக்கு அதிகமான ஊழியர்கள் பலதுறைகளில் பணியில் இருக்கிறார்கள். சுழற்சி முறையில் இரவு பகலாகப் பல துறைகள் இயங்குகின்றன. இரு பிரிவினருக்குமே ஒரே மாதிரியான ஊதியம் என்பதெல்லாம் சரியானதுதானா?மொத்த வரிப்பணத்தில் முக்கால் பகுதி அரசு ஊழியர்களுக்கே ஊதியமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் நிலைமை சீராகும் வரைக்குமாவது ஊதியத் தொகையை வரைமுறை படுத்தினால் எவ்வளவோ தொகையை மிச்சப்படுத்தி அந்தப்பணத்தில் மக்களுக்கு இந்நேரத்தில் உதவலாமே!

இதைச் செய்யாமல் வருமானம் இல்லாததால்தான் மதுக்கடைகளைத் திறக்கிறோம் எனக் கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா?அரசு மருத்துவமனைகள் மட்டுமே கரோனா நோயாளிகளைக் கையாளும் நிலையில் மேலும்750திருமணக் கூடங்கள்மருத்துவமனைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. மக்கள் வரிப்பணத்தில் மாத ஊதியம் பெறும் கடைநிலை அரசு ஊழியர்கள்,அதிகாரிகள் முதற்கொண்டு முதலமைச்சர்கள், நீதிபதிகள்,ஆளுநர்கள்,பிரதமர்,குடியரசுத் தலைவர் வரை அவர்களின் குடும்பங்கள் உட்பட எவருமே அரசு மருத்துவ மனைகளைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை! ஏழை எளிய மக்களுக்கு மட்டுமேதான் அவைகள் என்பதால் பெயரளவிற்குஇயங்கி வருகின்றன. ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழையக் காத்திருக்கும் கரோனா கிருமி இனி ஒருவரையும் விட்டு வைக்கப் போவதில்லை. எத்தனையோ குடும்பங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் சிறுவர்கள், முதியோர்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இனிமேல் அவர்களெல்லாம் நோய்த் தொற்றுக்கு ஆளாவார்கள். ஏற்கனவே நம்மிடம் முறையான மருந்தும் இல்லை, மருத்துவர்களுக்கும்,செவிலியர்களுக்கும், ஊழியர்களுக்குமேபற்றாக்குறை. இவர்களைஎல்லாம் இனி எங்கே கொண்டு போய்ப் படுக்க வைக்கப் போகிறார்கள்?

கடந்த நாட்களில் மதுக்கடைகளை மூடச் சொல்லி முதலில் அரசியல் கட்சிகள் போராடின. பின் அமைப்புகளும்,இயக்கங்களும் போராடின. இறுதியாக வேறு வழியின்றி மக்களே வீதியில் இறங்கினார்கள். குடும்பம் நடத்த பணம் இன்றி,குடிநோயாளிகளாகிதுன்புறுத்தும் கணவன் மற்றும் பிள்ளைகளால் பெண்களே களத்தில் இறங்கிப் போராடினார்கள். இனி அவர்களின் நிலை என்னவாகப் போகிறது? சமையல் எரிவாயு வாங்குவதற்கே அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் சரியாகிப் போனது. அரசு தந்த விலையில்லா பண்டங்கள் இந்தக் குடும்பங்களுக்கு எந்த மூலைக்கு, எத்தனை நாட்களுக்கு உதவப்போகிறது? வேலையிழந்துபணம் இல்லாத இந்த நடுத்தர ஏழை எளிய மக்களிடமிருந்து சுரண்டி வசம் கண்ட30,000கோடி தானே இப்பேர்ப்பட்டகொலைக்குச் சமமானசெயலைச் செய்ய வைக்கிறது?ஏற்கனவே பணிச் சுமையைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் காவல்துறை கொலை,கொள்ளை,திருட்டு,வன்முறை,விபத்துக்கள் போன்றவற்றை யெல்லாம்எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறதோ தெரியவில்லை?

பசியுடன் நாட்களைக் கடத்தப் போகும் இந்தத் தாய்மார்களை,பிள்ளைகளை, முதியோர்களை,குடிநோயாளிகள் பணம் கேட்டு அடித்துத் துன்புறுத்துவார்கள். குடித்துவிட்டு கரோனாவை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு அதன்பிறகும் துன்புறுத்துவார்கள். பண்ட பாத்திரங்கள் அடகுக் கடைக்குப் போகும்,கதறும் பெண்களின் தாலிகள் மஞ்சள் கயிறாக மாறும்! மருத்துவத்திற்கும்,வாழ்க்கை நடத்தவும் மக்களை அலையவிட்டு எத்தனை பிணங்கள் ஒரு நாளைக்கு விழுகிறது. எவ்வளவு பேருக்கு நோய்ப் பரவி இருக்கிறது என்ற செய்தியைத்தான் நாள்தோறும் ஊடகங்கள் கொடுத்துக் கொண்டிருக்க போகின்றன?எது நடந்தாலும் எதைச் செய்தாலும் மக்கள் மறந்து விடுவார்கள்! அதனால் தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடலாம் என அரசியல்வாதிகள் கணக்குப் போடலாம். அதற்கும் மக்கள் உயிரோடு இருந்தால்தான் முடியும்.

http://onelink.to/nknapp

ஒரு வேளை அவர்களின் கணக்கு இப்படியும் இருக்கலாம்! பதிவாகின்ற வாக்குகளின் எண்ணிக்கையின்வித்தியாசத்தில்தானே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்பதால் மக்கள் தேர்தலில் வாக்களிக்கத் தேவையில்லாமல் போனாலும் பரவாயில்லை.வேட்பாளர்களின் குடும்பம் மட்டுமே வாக்களித்துமக்களாட்சி எனும் பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா?நிதி நெருக்கடியிலுள்ள தமிழகத்தைத் தனிப்பகை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்துதயவு செய்து மதுக்கடைகள் இயங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்! மக்களைக் காப்பாற்றுங்கள்!

தங்கர் பச்சான்

இயக்குனர்''

எனக் குறிப்பிட்டுள்ளார்.

thangar bachan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe