Advertisment

"இதை செய்தாலே கரோனா தொற்று கட்டுக்குள் வந்து விடும்" - தங்கர்பச்சான் யோசனை!

cafsfs

தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதன்பின் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின் ஐந்து முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலில், ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி ரூபாய் 4,000 வழங்குவதற்கான கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார். அதன்படி, முதல் தவணையாக ரூபாய் 2,000 மே மாதத்திலேயே வழங்கப்பட உள்ளது. 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4,153.39 கோடி செலவில் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மு.க. ஸ்டாலின் இன்று (08.05.2021) அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் வரும் திங்கள் காலை 04.00 மணிமுதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில்,இந்த ஊரடங்கு குறித்து இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

Advertisment

"தமிழக அரசுக்கு தங்கர் பச்சானின் உடனடி கோரிக்கை.

நிலைமை கை மீறி சென்றுவிட்ட நிலையில் ஊரடங்கு என்பது தற்போதைய சூழலில் கட்டாயமான ஒன்றுதான். ஊரடங்கினாலோ அதை தொடர்ந்து நீட்டிப்பதினாலோ கரோனா இரண்டாம் அலையிலிருந்து மீண்டுவிட முடியாது. ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து தருவதினாலோ, நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கைகளை மேலும் மேலும் அதிகப்படுத்துவதினாலோ இழப்பிலிருந்து முழுமையாக மீள முடியாது. நிலைமையின் தீவிரத்தை தொலைநோக்கு பார்வைகொண்டு உணராமல் கட்டமைப்புகளை உருவாக்காமல் போனதன் விளைவே இத்தகைய நிலைமைக்குக் காரணம். சோதனை செய்துகொள்ளவே தயங்கும் இம்மக்கள் சோதனை செய்துகொண்டாலும் இரண்டு நாட்கள் கழித்தே மருத்துவ அறிக்கையை தெரிவிக்கின்றனர். அதற்குள் தொற்று தீவிரமாகி நுரையீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. நோய் தாக்கி மருத்துவம் மேற்கொள்ளாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது. அரசு மருத்துவமனைகளிலோ இடமில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் இப்பொழுது இதே நிலைதான்.

Advertisment

தனியார் மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் நோய் கண்டறியவே இரண்டாயிரம், மூன்றாயிரம் என அவரவர்களின் விருப்பத்திற்கேற்றபடி வசூலிக்கின்றனர். எட்டாயிரம், பத்தாயிரம் என நுரையீரல் சோதனைக்காக பெறுகின்றனர். இவை தொடர்பான மற்ற இரத்த சோதனைகளுக்கும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான கோடிகள் மக்களிடமிருந்து மருத்துவ சோதனை எனும் பேரில் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதுபோக மருத்துவனையில் உள்நோயாளியாகும் நிலை ஏற்பட்டுவிட்டால் அவர்கள் கேட்கின்ற பணத்தை தராமல் வெறும் உடலைக்கூட திருப்பித்தர மாட்டார்கள். பணம் படைத்தவர்களால் எப்படியும் வாழ்ந்துவிட முடியும். மாத ஊதியத்தை நம்பியும், வெறும் கை கால்களைக்கொண்டும் நாள்தோறும் உழைத்து வாழும் இம்மக்களின் துயரங்கள் சொல்லி மாளாது. என்னுடைய அனுபவத்தில் இதைக்கூற கடமைப்பட்டுள்ளேன்.

cfsscs

தொடக்கத்திலேயே நோயைக் கண்டறிந்து மருத்துவம் மேற்கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகாது. புதிய அரசு மிக விரைவாக நிலைமையை சமாளித்து நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் இதைச் செய்வது அவசியம் என எண்ணுகிறேன். நோய் முதன்முதலாக கண்டறியப்பட்ட சீன நாடு இன்று மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் கையாண்ட, பல தலைமுறைகள் கையாண்ட, பாரம்பரிய மருத்துவத்தை ஆங்கில மருத்துவத்துடன் இணைத்து கரோனாவை முற்றிலுமாக ஒழித்தார்கள். இதைத்தான் நம்முடைய இந்திய அரசும் உடனடியாக செய்திருக்க வேண்டும். இவ்வளவு பேரழிவை சந்தித்த பிறகும் மேலும் மேலும் தயங்குவதன் நோக்கம்தான் என்ன? சித்த மருத்துவத்தில் தேர்ச்சியடைந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நம்மிடம் உள்ளதாகக் கூறுகின்றனர். இதைத் தவிர்த்து ஹோமியோபதி மருத்துவமும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த வெற்றி கண்டிருக்கிறது. இத்துடன் ஆயுர்வேதம் மருத்துவத்தையும் இணைத்து இம்மூன்று மருத்துவர்களையும் கொண்ட உடனடி மருத்துவ மையங்களை உருவாக்கலாம். இதற்கான பெருத்த செலவுகளை அரசு சந்திக்க நேராது.

ஆங்காங்கே இருக்கிற பள்ளிக்கூடங்கள் போன்ற அரசு கட்டடங்களை மையங்களாக உருவாக்கலாம். இதைச் செய்தாலே தொடக்க நிலையிலேயே கரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு மருத்துவமனைகளைத் தேடி தஞ்சமடைய வேண்டி இருக்காது. எனக்குத் தெரிந்த சித்த மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய தேவை இல்லாமலேயே முழுமையாக குணப்படுத்திவிடுகின்றனர். தயவுசெய்து பீதியில் உறைந்து கிடக்கும் மக்களுக்காக அரசு இக்கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து, நோயிலிருந்தும் உயிரிழப்பிலிருந்தும் காப்பாற்றுங்கள். இதைச் செய்வதால் தொற்று ஏற்பட்டால் பணத்துக்கு எங்கே போவது எனும் மக்கள் பணம் செலவழிக்கத் தேவையில்லை. ஊரடங்கையும் நீட்டிக்கத் தேவையில்லை. தொழிலும் உற்பத்தியும் முடங்கி நம் பொருளாதாரமும் இழக்கத் தேவை இருக்காது.

நன்றி.

தங்கர் பச்சான்

தமிழ்க்குடி மகன்" என குறிப்பிட்டுள்ளார்.

cm stalin thangar bachan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe