Skip to main content

"இதை செய்தாலே கரோனா தொற்று கட்டுக்குள் வந்து விடும்" - தங்கர்பச்சான் யோசனை!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

cafsfs

 

தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதன்பின் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின் ஐந்து முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலில், ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி ரூபாய் 4,000 வழங்குவதற்கான கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார். அதன்படி, முதல் தவணையாக ரூபாய் 2,000 மே மாதத்திலேயே வழங்கப்பட உள்ளது. 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4,153.39 கோடி செலவில் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மு.க. ஸ்டாலின் இன்று (08.05.2021) அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் வரும் திங்கள் காலை 04.00 மணிமுதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த ஊரடங்கு குறித்து இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

 

"தமிழக அரசுக்கு தங்கர் பச்சானின் உடனடி கோரிக்கை.

 

நிலைமை கை மீறி சென்றுவிட்ட நிலையில் ஊரடங்கு என்பது தற்போதைய சூழலில் கட்டாயமான ஒன்றுதான். ஊரடங்கினாலோ அதை தொடர்ந்து நீட்டிப்பதினாலோ கரோனா இரண்டாம் அலையிலிருந்து மீண்டுவிட முடியாது. ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து தருவதினாலோ, நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கைகளை மேலும் மேலும் அதிகப்படுத்துவதினாலோ இழப்பிலிருந்து முழுமையாக மீள முடியாது. நிலைமையின் தீவிரத்தை தொலைநோக்கு பார்வைகொண்டு உணராமல் கட்டமைப்புகளை உருவாக்காமல் போனதன் விளைவே இத்தகைய நிலைமைக்குக் காரணம். சோதனை செய்துகொள்ளவே தயங்கும் இம்மக்கள் சோதனை செய்துகொண்டாலும் இரண்டு நாட்கள் கழித்தே மருத்துவ அறிக்கையை தெரிவிக்கின்றனர். அதற்குள் தொற்று தீவிரமாகி நுரையீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. நோய் தாக்கி மருத்துவம் மேற்கொள்ளாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது. அரசு மருத்துவமனைகளிலோ இடமில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் இப்பொழுது இதே நிலைதான்.

 

தனியார் மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் நோய் கண்டறியவே இரண்டாயிரம், மூன்றாயிரம் என அவரவர்களின் விருப்பத்திற்கேற்றபடி வசூலிக்கின்றனர். எட்டாயிரம், பத்தாயிரம் என நுரையீரல் சோதனைக்காக பெறுகின்றனர். இவை தொடர்பான மற்ற இரத்த சோதனைகளுக்கும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான கோடிகள் மக்களிடமிருந்து மருத்துவ சோதனை எனும் பேரில் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதுபோக மருத்துவனையில் உள்நோயாளியாகும் நிலை ஏற்பட்டுவிட்டால் அவர்கள் கேட்கின்ற பணத்தை தராமல் வெறும் உடலைக்கூட திருப்பித்தர மாட்டார்கள். பணம் படைத்தவர்களால் எப்படியும் வாழ்ந்துவிட முடியும். மாத ஊதியத்தை நம்பியும், வெறும் கை கால்களைக்கொண்டும் நாள்தோறும் உழைத்து வாழும் இம்மக்களின் துயரங்கள் சொல்லி மாளாது. என்னுடைய அனுபவத்தில் இதைக்கூற கடமைப்பட்டுள்ளேன். 

 

cfsscs

 

தொடக்கத்திலேயே நோயைக் கண்டறிந்து மருத்துவம் மேற்கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகாது. புதிய அரசு மிக விரைவாக நிலைமையை சமாளித்து நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் இதைச் செய்வது அவசியம் என எண்ணுகிறேன். நோய் முதன்முதலாக கண்டறியப்பட்ட சீன நாடு இன்று மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் கையாண்ட, பல தலைமுறைகள் கையாண்ட, பாரம்பரிய மருத்துவத்தை ஆங்கில மருத்துவத்துடன் இணைத்து கரோனாவை முற்றிலுமாக ஒழித்தார்கள். இதைத்தான் நம்முடைய இந்திய அரசும் உடனடியாக செய்திருக்க வேண்டும். இவ்வளவு பேரழிவை சந்தித்த பிறகும் மேலும் மேலும் தயங்குவதன் நோக்கம்தான் என்ன? சித்த மருத்துவத்தில் தேர்ச்சியடைந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நம்மிடம் உள்ளதாகக் கூறுகின்றனர். இதைத் தவிர்த்து ஹோமியோபதி மருத்துவமும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த வெற்றி கண்டிருக்கிறது. இத்துடன் ஆயுர்வேதம் மருத்துவத்தையும் இணைத்து இம்மூன்று மருத்துவர்களையும் கொண்ட உடனடி மருத்துவ மையங்களை உருவாக்கலாம். இதற்கான பெருத்த செலவுகளை அரசு சந்திக்க நேராது. 

 

ஆங்காங்கே இருக்கிற பள்ளிக்கூடங்கள் போன்ற அரசு கட்டடங்களை மையங்களாக உருவாக்கலாம். இதைச் செய்தாலே தொடக்க நிலையிலேயே கரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு மருத்துவமனைகளைத் தேடி தஞ்சமடைய வேண்டி இருக்காது. எனக்குத் தெரிந்த சித்த மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய தேவை இல்லாமலேயே முழுமையாக குணப்படுத்திவிடுகின்றனர். தயவுசெய்து பீதியில் உறைந்து கிடக்கும் மக்களுக்காக அரசு இக்கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து, நோயிலிருந்தும் உயிரிழப்பிலிருந்தும் காப்பாற்றுங்கள். இதைச் செய்வதால் தொற்று ஏற்பட்டால் பணத்துக்கு எங்கே போவது எனும் மக்கள் பணம் செலவழிக்கத் தேவையில்லை. ஊரடங்கையும் நீட்டிக்கத் தேவையில்லை. தொழிலும் உற்பத்தியும் முடங்கி நம் பொருளாதாரமும் இழக்கத் தேவை இருக்காது.


நன்றி.
தங்கர் பச்சான்
தமிழ்க்குடி மகன்" என குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்; நேற்று அழுதுட்டேன்' - தங்கர் பச்சான் பேட்டி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
pmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் கடலூரில் வாக்கு சேகரிப்புக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சான் பேசுகையில், ''கடலூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நெடுஞ்சாலைகளை மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்துதான் உருவாக்குகிறார்கள். ஆனால், உள்ளூரில் இருக்கின்ற சாலைகள் எல்லாம் போய்ப் பாருங்கள். உள்ளே இருக்கக்கூடிய மக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் எவ்வளவு தரமற்ற நிலையில் சீர்குலைந்து கிடக்கிறது என்பதைப் பாருங்கள். ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆட்சியாளர்களின் மேல் பிரச்சனை இல்லை. பிரச்சனை மக்களிடம் இருக்கிறது.

இந்த மக்கள் எனக்கான வசதியை செய்து கொடுக்காமல் ஊருக்குள்ள வந்து ஓட்டு கேட்காதீர்கள் என ஏன் கேட்கவில்லை. என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள். தொடர்ந்து வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுப் போட்டு கொண்டே இருந்தீர்களா? நீங்கள் ஓட்டுப் போடணும் என்ற அவசியமே கிடையாது. எலக்சன் எதற்கு தெரியுமா வைக்கிறாங்க? உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால், பிரச்சனை இருந்தால், யார் நமக்கு வந்தால் செய்வார்கள், யார் திறமைசாலி என்று பார்த்து ஓட்டு போட வேண்டும். அப்படி பார்த்து ஓட்டு போட்டுள்ளீர்களா? பணம் கொடுக்குறவங்க 20 கார்ல அடியாள் மாதிரி ஆளுங்கள கூட்டிக்கிட்டு வர்றாங்க. இதே மாதிரி ஆளுங்களுக்கு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தா என்ன கிடைக்கும்?  நான் இந்த மண்ணிற்கான ஆளாக இருந்தாலும் சில ஊர்களை நான் பார்த்து அழுதுவிட்டேன். கேட்டால் அமைச்சர் அந்த ஊரிலேயே இருக்கிறார். அவர் பத்து வருஷமாக அமைச்சராக இருந்திருக்கிறார். ஒரு பேருந்து வசதி கிடையாது. எந்த வசதியும் கிடையாது. மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் ஓட்டு கேட்க என்ன தகுதி இருக்கிறது'' என்றார்.

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.