Skip to main content

“இதற்கு அப்பாவி பெற்றோர்களும் மாணவர்களும் தொடர்ந்து பலியாகிறார்கள்” - இயக்குநர் தங்கர் பச்சான் அறிக்கை 

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

thangar bachan

 

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கெளதம் மேனன், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள செல்ஃபி திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் தங்கர் பச்சான் செல்ஃபி திரைப்படத்தை வெகுவாகப் பாரட்டியுள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்விக்கூடங்கள் பணம் கொள்ளையடிக்கும் கூடங்களாக உருவாக்கப்பட்டபின் தமிழ்நாடு அதன் கல்வியின் தரத்தை இழந்து வருகிறது. இந்த தனியார் கல்விக்கூடங்கள் எப்படிப்பட்ட தரகர்களை உருவாக்கி வைத்துள்ளது. இதில் அப்பாவி பெற்றோர்களும் மாணவர்களும் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கிறார்கள் எனும் உண்மையை நேர்த்தியாக பொருள் உரைக்க பதிவு செய்வதுதான் ’செல்பி’ திரைப்படம்.

 

மதிமாறன் எனும் புதிய இயக்குநரின் ஆற்றலும் திறமையும் வியப்பில் ஆழ்த்துகின்றன. அதேபோன்று குணாநிதி எனும் அறிமுக நடிகரின் இயல்பான மனம் கவரும் நடிப்பாற்றல் நம்பிக்கை ஊட்டுகிறது. ஜி.வி.பிரகாஷ் முதன்மை பாத்திரத்தை தாங்கி நிற்கிறார். இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம் அவரின் திரைப்பயணத்தை மேலும் விரிவுப்படுத்தும்.

 

முழு திரைக்கதையின் மையப்புள்ளியான எதிர்நாயகன் பாத்திரத்தில் கெளதம் மேனன் நடிப்பதுதான் இத்திரைப்படத்தின் கருவிற்கு மேலும் வலுவூட்டுகிறது. திரையில் தோன்றும் அனைத்து நடிகர்களும் சிறு பிசகில்லாமல் நடிப்பது ஒன்றே இயக்குநரின் திறனை பறை சாற்றும். கடலூர் மாவட்ட வட்டார வழக்கு மிகச் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மக்களைக் காப்பாற்றுவதாக கூறப்படும் நான்கு தூண்களும் அதன் மீதான நம்பிக்கையினை இழந்து கொண்டிருக்கும் நிலையில் திரைப்படங்கள்தான் அரிதாக எப்பொழுதாவது சமூகத்தின் சிக்கல் சீர்கேடுகள் குறித்து கேள்வி எழுப்புகின்றன. ’செல்பி’ அதனை திறம்படச் செய்திருக்கிறது. வெறும் பணப்பைகளை நிரப்புவதற்காக மட்டுமே உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு இடையில் இப்படைப்பின் வரவு கவனத்துக்குரியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்; நேற்று அழுதுட்டேன்' - தங்கர் பச்சான் பேட்டி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
pmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் கடலூரில் வாக்கு சேகரிப்புக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சான் பேசுகையில், ''கடலூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நெடுஞ்சாலைகளை மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்துதான் உருவாக்குகிறார்கள். ஆனால், உள்ளூரில் இருக்கின்ற சாலைகள் எல்லாம் போய்ப் பாருங்கள். உள்ளே இருக்கக்கூடிய மக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் எவ்வளவு தரமற்ற நிலையில் சீர்குலைந்து கிடக்கிறது என்பதைப் பாருங்கள். ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆட்சியாளர்களின் மேல் பிரச்சனை இல்லை. பிரச்சனை மக்களிடம் இருக்கிறது.

இந்த மக்கள் எனக்கான வசதியை செய்து கொடுக்காமல் ஊருக்குள்ள வந்து ஓட்டு கேட்காதீர்கள் என ஏன் கேட்கவில்லை. என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள். தொடர்ந்து வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுப் போட்டு கொண்டே இருந்தீர்களா? நீங்கள் ஓட்டுப் போடணும் என்ற அவசியமே கிடையாது. எலக்சன் எதற்கு தெரியுமா வைக்கிறாங்க? உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால், பிரச்சனை இருந்தால், யார் நமக்கு வந்தால் செய்வார்கள், யார் திறமைசாலி என்று பார்த்து ஓட்டு போட வேண்டும். அப்படி பார்த்து ஓட்டு போட்டுள்ளீர்களா? பணம் கொடுக்குறவங்க 20 கார்ல அடியாள் மாதிரி ஆளுங்கள கூட்டிக்கிட்டு வர்றாங்க. இதே மாதிரி ஆளுங்களுக்கு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தா என்ன கிடைக்கும்?  நான் இந்த மண்ணிற்கான ஆளாக இருந்தாலும் சில ஊர்களை நான் பார்த்து அழுதுவிட்டேன். கேட்டால் அமைச்சர் அந்த ஊரிலேயே இருக்கிறார். அவர் பத்து வருஷமாக அமைச்சராக இருந்திருக்கிறார். ஒரு பேருந்து வசதி கிடையாது. எந்த வசதியும் கிடையாது. மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் ஓட்டு கேட்க என்ன தகுதி இருக்கிறது'' என்றார்.

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.