
பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற சுதந்திர தினத்தன்று (15.07.2024) வெளியாகவுள்ள நிலையில், அண்மையில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் இப்படத்தின் ‘மினிக்கி மினிக்கி...’பாடலுக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வெளியிடுவோர்க்குத் தங்க நாணயம் தருவதாக ஸ்பெஷல் ஆஃபரை படக்குழு வெளியிட்டது. அதில் சிறந்த ரீல்ஸாக 20 ரீல்ஸை தேர்வு செய்து 20 தங்க நாணயம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் வெற்றிபெறுபவர்கள் படக்குழுவினருடன் இணைந்து உணவு அருந்தும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், கேரளா, ஹைதராபாத், கர்நாடகா, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரசிகர்களையும், பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து வரும் தங்கலான் படக்குழு, தற்போது கோவையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தியது. அதில் விக்ரம், பார்வதி, தயாரிப்பாளர் தனஞ்செயன், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது இப்படம் ஆஸ்கர் வாங்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி படக்குழுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் தனஞ்செயன், “அதற்கான முயற்சியில்தான் இருக்கிறோம். இந்த வருடம் தேசியத் திரைப்படக் கூட்டமைப்பில் விண்ணப்பித்துள்ளோம். அவர்களும் ட்ரைலரை பார்த்துவிட்டு ஆஸ்கருக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று கூறினார்கள். அக்டோபர் அல்லது நவம்பரில் ஷார்ட்லிஸ்ட் செய்வார்கள். அதில் கண்டிப்பாக தங்கலான் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்” என்றார்.