தமிழ் சினிமாவில் கடந்த 20ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருபவர் தம்பி ராமையா. குறிப்பாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து மகக்ள் மத்தியில் பிரபலமானவர். இயக்குநராகவும் மூன்று படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான ‘ராஜாகிளி’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் கதை எழுதி இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். கடைசியாக வெற்றி நடிப்பில் கடந்த ஆகஸ்டில் வெளியான ‘முதல்பக்கம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  

Advertisment

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தம்பி ராமையா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து பேசியுள்ளார். சென்னை வியாசர்பாடியில் ‘சாய்பாபா 51’ பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், “வைகோ போன்ற ஒரு ஆணழகன், சினிமாவில் கால் பதித்திருந்தால் அவர் தான் இன்றைக்கு தென்னிந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார். அவருடைய உயரம், கண் புருவம், கம்பீரம், மூக்கின் அழகு யாருக்கு இருக்கிறது. அமிதாப்பச்சன் வைகோவிடம் யாசம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் வைகோ சினிமாவை விட்டுவிட்டு அரசியல் துறையை தேர்ந்தெடுத்தார். 

இளையராஜாவை தள்ளிவைத்துவிட்டு கடந்த 40 ஆண்டு கால இசை வரலாற்றை பேச முடியாது. அப்படியேற்பட்ட சூழலில் இசை மேடையில், கையில் சிறு குறிப்புகள் இல்லாமல் வைகோ பேசிய பேச்சு, சூப்பர் ஸ்டார் ரஜினியையே மிரள வைத்துவிட்டது. ரஜினி ஆச்சரியப்பட்டு போனார். வைகோவின் பரிணாம வளர்ச்சியாக நான் தம்பி துரை வைகோவை பார்க்கிறேன். அவர் பெரியாரையும் வணங்குவேன், பெருமாளையும் வணங்குவேன் என பேசுகிறார்” என்றார்.