‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிதந்த உற்சாகத்தில் உள்ள நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு, படத்திற்கான முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு குறித்து நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டார். அப்பதிவில், " 'தளபதி 65' குழுவில் இணைவது குறித்து உற்சாகமாக இருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்த தளபதி விஜய் மற்றும் இயக்குநர் நெல்சனுக்கு நன்றி. கண்டிப்பாக இந்த வாய்ப்பை மதிப்புமிக்கதாக மாற்றுவேன். வெறித்தனமான ஒரு பாடலுக்கான ஒத்திகை 24 ஏப்ரல் அன்று தொடங்குகிறது. மே 3-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடக்கவுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ஜானி மாஸ்டர் நீக்கிவிட்ட போதிலும், சில ரசிகர்கள் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துவிட்டனர். அந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.