ADVERTISEMENT

வழக்கத்துக்கு மாறாக மேடையில் காமெடி செய்த விஜய்!

04:57 PM Oct 03, 2018 | vasanthbalakrishnan

''உசுப்பேத்தறவன் கிட்ட உம்முன்னும், கடுப்பேத்தறவன் கிட்ட கம்முன்னும் இருந்தால் வாழ்கை ஜம்முனு இருக்கும்" - இது நேற்று நடந்த சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறிய பன்ச். விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.

ADVERTISEMENT



ஆரம்ப காலத்தில் 'அவர் ரிஸர்வ்ட் டைப், அதிகம் பேசமாட்டார்' என்பதே திரையுலகில் விஜய் குறித்த கருத்தாக இருந்தது. அப்போதெல்லாம் மேடையில் பேச மிகவும் தயங்குவார் விஜய். எப்போதாவது ஒரு முறை கலைநிகழ்ச்சி மேடையில் பாடுவார். தன் ரசிகர் மன்ற மேடைகளிலேயே கூட அதிகம் பேசாதவர்தான் விஜய். இப்படியிருந்த விஜயை பேசத் தூண்டியது 'தலைவா' அனுபவம் என்று சொல்லலாம். 'தலைவா' படம் சந்தித்த பிரச்சனைகளும் இவருக்குத் தந்த அனுபவங்களும் விஜயை மேடையில் நிறைய பேசவைத்தன.

'தலைவா' வெளியானதுக்குப் பின் நடந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் முதன் முதலில் பக்குவமாக, தெளிவாக உள்ளர்த்தத்தோடு பேசினார் விஜய். "ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள்தான் தீர்மானிக்கவேண்டும், சூழ்நிலைகள் அல்ல" என்று பன்ச் வைத்தார். "அவ்வளவு ஈஸியா இந்த உலகத்துல நம்மள வாழ விட்றமாட்டாங்க" என்று மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். அந்த விழா நடப்பதற்கு சில நாட்கள் முன்பு, ட்விட்டரில் விஜய் குறித்து விமர்சித்த ஒரு பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக விமர்சித்திருந்தனர் சில விஜய் ரசிகர்கள். அது அளவுக்கு மீறி சென்றதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுவெளியில் கோரிக்கை வைத்தார். அதை குறிப்பிட்டுதான் நடிகர் விஜய் இப்படி பேசினார் என்று விமர்சனங்களும் எழுந்தன. இதற்கு முன் 'வில்லு' படத்தின் தோல்விக்குப் பின் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், அவரது பேச்சிற்கு இடையூறு விளைவித்த ரசிகர்களை 'ஏய்...பேசிக்கிட்டுருக்கேன்ல' என்று கடுமையாக கண்டித்தது, இணையம் பரவலாக இல்லாத காலத்திலும் வைரலானது.

ADVERTISEMENT



இப்படி இதுவரை மேடைகளில் பெரும்பாலும் சீரியஸாகவே பேசி வந்துள்ள விஜய், நேற்று மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். "என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே" என்று ஆரம்பித்த அவர், "இதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு, சும்மா சொல்லணும்னு தோணுச்சு" என்றார் புன்னகையுடன். "மெர்சலுக்கும் சர்காருக்கும் என்ன வித்தியாசமென்றால், மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது, சர்காரில், அரசியல்ல மெர்சல் பண்ணியிருக்கிறார் முருகதாஸ் சார்" என்று வார்த்தைகளில் விளையாடினார். கலாநிதி மாறன் பற்றி குறிப்பிடும் பொழுது, "கலையை வளர்க்க நிதியை அள்ளி அள்ளி தருவதால்தான் கலாநிதி மாறன் என்று இவர் பெயர் அமைந்ததோ" என்று கலகலப்பாகக் குறிப்பிட்டார்.

வரலக்ஷ்மி குறித்து பேசும்போது, "வர்ற லக்ஷ்மியை விட கூடாதுல?" என்று கமெண்ட் பண்ணினார். யோகி பாபு குறித்துப் பேசும்போது அவரது வளர்ச்சியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன் என்று கூறிவிட்டு, "உங்க ஹேர்ஸ்டைல சொல்லல யோகி, உங்க சினிமா கரியரை சொன்னேன்" என்றார். இப்படி இதுவரை காணாத உற்சாகத்தோடு நேற்றைய மேடையில் 'நண்பா, நண்பீ' என ஜாலி செய்தார் விஜய்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT