thalapathy 68 cinematographer siddhartha nuni criticise animal movie

அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள படம் ‘அனிமல்’. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், சக்தி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 4 பேர் தயாரித்துள்ளனர். 8 பேர் இசையமைத்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 1 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும் ஆலியா பட், த்ரிஷா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் படக்குழுவை புகழ்ந்துதள்ளினர். வசூலிலும் இதுவரை ரூ. 755 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனிடையே விமர்சனங்களும் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன்நாடாளுமன்றத்தில், “வன்முறை மற்றும் பெண் வெறுப்பை நியாயப்படுத்தும் திரைப்படம். வெட்கக்கேடானது” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து ‘தளபதி 68’ பட ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி தற்போது அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisment

அவரது இன்ஸ்டாக்ராம் ஸ்டோரியில், “அனிமல் படத்தைப் பார்த்தேன், நேர்மையாக சொன்னால் அந்தப் படம் என்னை ட்ரிகர் செய்தது. நச்சுத்தனமான ஆண்களின் கோட்பாடுகளை நியாயப்படுத்துகிறது. சட்ட விதிகள் இல்லாத வன்முறைகள், திருமண பலாத்காரம், துஷ்பிரயோகமான உறவுகள் போன்றவற்றில் பெண் ஊமையாகவும் கணவர் மிருகமாகவும் இருக்கிறார். இந்தப் படம் இவ்வளவு வசூல் செய்திருப்பது நாம் வாழும் நாட்டின் சமூக நிலையைப் பிரதிபலிக்கிறதா? மேலும் ஏ சான்றிதழ் பெற்ற ஒரு படத்திற்காக, ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபலமான மல்டிபிளெக்ஸில் நிறைய குழந்தைகளை பார்த்தேன். சென்சார் போர்டு எங்கே போனது?” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளார்.