Skip to main content

லோகேஷின் சம்பவம் லோடிங்... தொடங்கியது 'தளபதி 67'

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

thalapathy 67 pooja ceremony happened starts

 

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் 'ரஞ்சிதமே' பாடலை தொடர்ந்து சிம்பு பாடியுள்ள 'தீ தளபதி' பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதோடு யூ-ட்யூபில் 8.5 மில்லியன் பார்வைகளைத் தாண்டி ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. 

 

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். ஏற்கனவே விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்கான பணிகளில் லோகேஷ் கனகராஜ் தனது குழுவுடன் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும், சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில், 'தளபதி 67' படத்தின் பூஜை இன்று சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றுள்ளது. இந்தப் பூஜையில் விஜய், லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளதாகவும் உள்ளே செல்ஃபோன்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் ஒளிப்பதிவாளராக விஜய்யின் 'நண்பன்', 'பீஸ்ட்' உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  

 

மேலும், லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தைப் போல் 'தளபதி 67' படத்தின் அறிவிப்பையும் ஒரு டீசரின் மூலம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்த அறிவிப்புக்கான டீசரின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

பொதுவாக விஜய் படங்களின் பூஜை நடைபெறும் போது, அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி ட்ரெண்டில் இருக்கும். ஆனால், இம்முறை செல்ஃபோன்கள் அனுமதிக்கப்படாததால் எந்தப் புகைப்படமும் வெளியாகாமல் இருப்பது ரசிகர்களை சற்று வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் படக்குழு தரப்பிடம் இருந்து அதிகாரப்பூர்வமான புகைப்படங்கள் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.      

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினி படத்தில் இணையும் ஸ்ருதிஹாசன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
shrtthi hassan to join rajini 171

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ, வருகின்ற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அந்த போஸ்டரில் ரஜினி வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். மேலும் கையில் கடிகாரத்தை விலங்காக கட்டியிருந்தார். இதை வைத்து ஏகப்பட்ட கதைகள் ரசிகர்களால் யூகிக்கப்பட்டது.

இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிரபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து, 'தி ஐ' (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவரது இசையில் இனிமேல் ஆல்பம் சமீபத்தில் வெளியானது. இதில் ஸ்ருதிஹாசனும் லோகேஷும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தொடங்கியது சர்ச்சை - விஜய் பாடலுக்கு எதிராகப் புகார் 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
complaint against vijay the goat song whistle podu lyrics

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, புதுச்சேரி, கேரளா, உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. விஜய்யுடன் இணைந்து இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் பாடியுள்ளனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்க மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல், படத்தில் ஒரு குழுவாக பணியாற்றும் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் ஜாலியாக ஒரு பார்ட்டி செய்யும் சூழலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பாடலில் ‘கேம்பைன தான் தொறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா’ என விஜய்யின் அரசியல் டச்சும், ‘நண்பா நண்பி விசில் போடு’ என விஜய்யின் ஃபேவரட் டயலாக்குகளும் இடம்பெறுகின்றன.  

இந்த நிலையில் இப்பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புகார் மனு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மனுவில், “நடிகர் விஜய் தொடர்ந்து பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன். தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதைப் பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை.!

அதிரடி கெளப்பட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது. மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான், கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை, ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது. இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ், விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் விஜய். குடிமக்கள் தான் நம் கூட்டணி, விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயைத் திறக்கும் நடிகராக விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் விஜய் செயல்பட்டு வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி தான்’ பாடல் லிரிக் வீடியோ வெளியான போது, விஜய் புகைபிடித்துக் கொண்டே பாடல் முழுவதும் நடனமாடியது விமர்சனத்துக்குள்ளானது. மேலும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருப்பதாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்க பின்பு அப்பாடலில் 'புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விஜய்யின் படங்கள், தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் தற்போது தி கோட் படத்திற்கும் அது தொடர்கிறது.