Skip to main content

ஜெயலலிதா பயோபிக் வெளியீட்டில் புதிய சிக்கல்!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

Kangana Ranaut

 

இயக்குநர் ஏ.எல். விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி திரைப்படம் உருவாக்கியுள்ளார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்றதையடுத்து, படத்தை கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தது. நாடு முழுவதும் ஏற்பட்ட கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதால், திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது.

 

பின், ‘தலைவி’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த படக்குழு, ‘தலைவி’ திரைப்படம் திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் என உறுதியளித்தது. இந்தியாவில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து, இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு திரையரங்குகள் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, வரும் செப்டம்பர் 10ஆம் தேதி ‘தலைவி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்தது.

 

இந்த நிலையில், 'தலைவி' படத்தின் ரிலீஸில் தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. தலைவி திரைப்படம் திரையரங்கில் வெளியான இரண்டு வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடும் வகையில் அமேசான் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் படக்குழு ஒப்பந்தம் போட்டிருந்தனர். தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திரையரங்க உரிமையாளர்கள், திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகான நான்கு வாரங்கள் கழித்தே படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு 'தலைவி' படக்குழு சம்மதம் தெரிவிக்கும்பட்சத்தில் மட்டுமே 'தலைவி' படத்தை திரையரங்கில் வெளியிடுவோம் என திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு கூறுவதாகக் கூறப்படுகிறது. இதனால் 'தலைவி' திரைப்படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பாக 'தலைவி' படக்குழுவினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இருதரப்பிற்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் இறுதிமுடிவைப் பொறுத்தே 'தலைவி' படத்தின் திரையரங்க வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்