thalaivar 171 titled as coolie

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில், தங்கம் கடத்தும் குடோனுக்குள், ரஜினி செல்கிறார். அங்கு அந்தக் கும்பலை அடித்துபோடுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. சண்டை காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் ரஜினி, வசனம் பேசிக்கொண்டே அக்கும்பலை தாக்குகிறார். “அப்பாவும் தாத்தாவும், வந்தார்கள் போனார்கள். தப்பென்ன, சரியென்ன, எப்போதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே,... சோறுண்டு, சுகமுண்டு, மதுவுண்டு, மாதுண்டு, மனமுண்டு என்றாலே, சொர்கத்தில் இடமுண்டு” என்று அவர் ஏற்கெனவே அவர் படத்தில் பேசும் வசனம் இடம்பெறுகிறது.

மேலும் இறுதியில் ‘முடிச்சிடலாம் மா...’ ரஜினி சிரித்து கொண்டே பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தங்க கடத்தலை வைத்து உருவாகுவது போல் தெரியும் சூழலில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.