விஸ்வாசம் படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவா ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கி வருகிறார். இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைப்பாளராகவும், வெற்றி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

தலைவர் 168 என்று அழைக்கப்படும் இந்தப் படத்தில் ரஜினியின் லுக் எதுவுமே வெளியாகவில்லை. அனைத்திலுமே ரகசியம் காத்து வந்தது படக்குழு. இதனிடையே தெலுங்கு 'பிக் பாஸ் 3' வெற்றியாளர் ராகுல் சிப்லிகஞ்ச், ரஜினியை 'தலைவர் 168' படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளார். அப்போது ரஜினியுடன் புகைப்படமெடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ரஜினி தலைவர் 168 பட லுக்கில் இருந்ததால் ரசிகர்கள் அனைவரும் பகிர தொடங்கியது பெரும் சர்ச்சையானது. அதனை தொடர்ந்து அவர் அந்த பதிவை டெலிட் செய்துவிட்டார்.
இந்நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு தலைவர் 168 படத்திலிருந்து அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. அதனை தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு, தலைவர் 168ன் தலைப்பு ‘அண்ணாத்த’ என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.