சினிமா தொழிலாளர்களுக்கு மூன்று வருடத்துக்கு ஒரு முறை ஊதிய உயர்த்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தெலுங்குத் திரைப்படத்துறையில் அந்த ஊதிய உயர்வு உயர்த்தப்படவில்லை என கூறப்படுகிறது. அதனால் தெலுங்கு திரைப்படத் துறையின் தொழிலாளர் கூட்டமைப்பு, 30 சதவிகித ஊதிய உயர்வு கேட்டு கடந்த 4ஆம் தேதி முதல் போராட்டத்தை நடத்தி வருகிறது.
மேலும் வெள்ளித்திரை, சின்னதிரை, வெப் தொடர்கள் என அனைத்து படப்பிடிப்புகளிலும் தொழிலாளர்கள் கலந்து கொள்ளாமல் ஸ்ட்ரைக் செய்து வருகின்றனர். அதோடு தெலுங்கு திரைப்படங்களில் பங்கேற்பதை தவிர்த்து அங்கு நடக்கும் மற்ற மொழி திரைப்படங்களிலும் கலந்து கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் அங்கு திட்டமிடப்பட்டுள்ள படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில் தெலுங்கு திரைத்துறை மற்ற மாநிலங்களை விட தொழிலாளர்களுக்கு அதிக ஊதியத்தை ஏற்கெனவே வழங்கி வருவதாகவும் அதனால் சங்கங்களில் இல்லாத, திரைப்படத் துறையில் ஆர்வமுள்ள தொழிலாளர்களுடன் பணிபுரியத் தயாரிப்பாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சிரஞ்சீவியை அவரது வீட்டில் சந்தித்து பிரச்சனை குறித்து பேசியுள்ளனர். அவர் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.