Skip to main content

“எங்களைக் காப்பாற்ற முழு ஒத்துழைப்பு வழங்குங்கள்” -பத்திரிகையாளர்களுக்கு விநோதமான கோரிக்கை!!!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

theatre

 

 

அண்மையில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் பூரி ஜகன்னாத், தெலுங்கு திரையுலகுக்கு தோல்விப் படங்கள் எவ்வளவு முக்கியமானவை என்றும் அவற்றுக்கு தரும் விமர்சனங்களால் துறை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த ஆடியோவை வழிமொழிந்து தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் பத்திரிகையாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

 

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “200 படங்கள் வந்தால் அதில் 190 படங்கள் தோல்வியடைகின்றன. இவற்றை சரியாக எடை போட முடியாத பத்திரிகையாளர்கள் அவற்றுக்கு மதிப்பீடு (rating) என்ற பெயரில் அவர்கள் போக்கில் ஒன்றைத் தருகின்றனர். உண்மையில் இந்த 190 தோல்விப் படங்களால் தான் துறை நடக்கிறது. பலருக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கும் நன்மை நடக்கிறது.

 

ஆனால் தோல்விப் படத்துக்கு வரும் கடுமையான விமர்சனங்களால் இயக்குனர்கள் அழிந்து போகின்றனர், தயாரிப்பாளர்களுக்கு அடுத்த படத்துக்கு யாரும் தேதி கொடுக்க மாட்டார்கள். எனவே இனி கடுமையான விமர்சனம் எழுதுபவர்கள் ரேட்டிங் கொடுக்கும்போது ஒரு புள்ளிகளுக்கு பதிலாக இரண்டு கொடுங்கள், இரண்டு புள்ளிகள் என்றால் மூன்று கொடுங்கள். அப்படிக் கொடுத்தால் தான் படத்தின் தொலைக்காட்சி உரிமைத்தை விற்க முடியும்.

 

வெற்றிப் பட இயக்குனர், தயாரிப்பாளர்களை விட; தோல்விப் பட இயக்குனர், தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும். வியாபார கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் திரைப்படங்களே இயக்கக்கூடாது. ஆனால் திரைப்படங்கள் மீது தாகம் கொண்டவர்கள் மட்டுமே தயாரிக்க முன் வருகிறார்கள். யாருமே அவரது படம் தோல்வியடைய வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார். ஒரு தோல்விப் படத்துக்குப் பின் 10 வருட உழைப்பு இருக்கிறது. அந்தப் படத்தின் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.

 

பூரி ஜகன்னாத் கூறியிருக்கும் இந்தக் கருத்துகளை நாங்கள் வழிமொழிகிறோம். எனவே மேற்சொன்ன விஷயங்களை அனைத்து பத்திரிகையாளர்களும், சேனல்களும் கருத்திக் கொண்டு, தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மன்னிப்பு கேட்க வேண்டும்” - இசையமைப்பாளருக்கு எஸ்.பி.பி. மகன் நோட்டீஸ்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
SPB al issue sp charan send legal notice to music diector

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் அரங்கேறி வருகிறது. ராஷ்மிகா, கஜோல் உள்ளிட்ட நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. அதே சமயம் மறைந்த பாடகரின் குரல்களை ஏஐ மூலம் மீண்டும் கொண்டு வந்து பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் ஏ.ஆர். ரஹ்மான், லால் சலாம் படத்தில் மறைந்த பின்னணி பாடகர்களான ஷாகுல் ஹமீத் மற்றும் பம்பா பாக்கியா ஆகியோரின் குரல்களை, 'திமிறி எழுடா' பாடலில் பயன்படுத்தியிருந்தார். 

அவர்களின் குரலை ஏ.ஐ. மூலம் பயன்படுத்தியதற்காக, அவர்களின் குடும்பத்தாரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம். மேலும் அதற்குத் தகுந்த சன்மானமும் கொடுத்துள்ளோம் என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலை ஏ.ஐ. மூலம் ‘கீடா கோலா’ என்ற தெலுங்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் பயன்படுத்தியுள்ளார். இதை உறுதி செய்யும் விதமாக ஒரு பேட்டியிலும் அதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவர் எஸ்.பி.பி குடும்பத்தாரிடம் முறையாக அனுமதி வாங்கவில்லை என அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் அனுப்பியுள்ளார். 

அவர் நோட்டீசில் குறிப்பிட்டிருப்பதாவது, “எந்தவொரு தொழில்நுட்பமும் மனித குலத்திற்கு பயனளிக்க வேண்டுமே தவிர வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது. அவரது குரல் இந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், இது எங்களிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படுவது வேதனையான விஷயம். முறையான அனுமதி பெறாமல் எனது தந்தையின் குரலைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். நஷ்ட ஈடு மற்றும் ராயல்டியில் பங்கு வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

18 வருடம் கழித்து மீண்டும் முன்னணி நடிகருக்கு ஜோடியான த்ரிஷா

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
trisha joined in chiranjeevi Vishwambhara

த்ரிஷா தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் ஐடென்டிட்டி, மோகன்லாலின் 'ராம் பார்ட் 1' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படி தொடர்ந்து தமிழ், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் 156வது படத்தில் இணைந்துள்ளார். வசிஷ்டா இயக்கும் 'விஷ்வாம்பரா' படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளார். யுவி க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த பொங்கலன்று இப்படத்தின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அடுத்த வருடம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இப்படம் மூலம் 18 வருடங்கள் கழித்து மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட த்ரிஷா, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு ஸ்டாலின் படத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையான நிலையில் சிரஞ்சீவி, த்ரிஷாவிற்கு ஆதரவாக மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.