
பிரபல பாடகர் எஸ்.பி.பி-யின் மறைவிற்கு பல பிரபலங்கள் தங்களின் இரங்கலை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் எஸ்.பி.பிக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்ட பதிவுகளின் தொகுப்பு.
மகேஷ் பாபு: எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற உண்மையை என்னால் ஏற்க முடியவில்லை. அவரது ஆத்மார்த்தமான குரலுக்கு ஈடாக எதுவும் கிடையாது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்துக்கு மனமார்ந்த இரங்கல்கள் மற்றும் ஆறுதல்கள்
சிரஞ்சீவி: இசை உலகுக்கு மிக இருண்ட நாள். எஸ்பி பாலு போன்ற, ஈடு இணையில்லாத இசை மேதையின் மறைவோடு ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. தனிப்பட்ட முறையில் எனது வெற்றிக்கு, எனக்காக எண்ணற்ற, மறக்க முடியாத பாடல்களைப் பாடிய பாலு அவர்களின் குரலுக்கு நான் அதிகக் கடன்பட்டிருக்கிறேன்.
இன்னொரு சகாப்தமான கண்டசாலாவுக்குப் பிறகு யார் வருவார்கள் என்று இசை உலகம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போது எஸ்பிபி வடிவில், இசை உலகுக்கு மிகப் பிரகாசமான நட்சத்திரம் வந்தது. அவரது மென்மையான குரல் மொழி, கலாச்சார எல்லைகளைத் தாண்டியது, இந்தியா முழுவதும் பல ரசிகர்களைப் பல வருடங்கள் கட்டிப்போட்டது. மீண்டும் இன்னொரு எஸ்பிபி வரவே முடியாது. அவரே தான் மீண்டும் பிறந்து வந்து வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். அவரது இழப்பால் நொறுங்கிப் போயிருக்கிறேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் பாலு அவர்களே
அல்லு அர்ஜுன்: சகாப்தம் எஸ்பி பாலசுப்பிரமணியம் இன்று நம்மை விட்டு மறைந்துவிட்டார் என்பது தெரிந்து ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறேன். ஆனால், அவர் குரல் என்றும் கேட்கப்படும், நினைக்கப்படும். நம் வாழ்வில் கொண்டாடப்படும். இந்திய சினிமாவில் மிக உயர்ந்த ஆளுமைகளில் ஒருவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். என்றும் அவருக்கான மரியாதை இருக்கும்.
நானி: இந்த இதயம் பல லட்சம் பாடல்களாக நொறுங்கிவிட்டன. என் மகனைப் படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மனைவியைச் சொன்னது ஒரே ஒரு முறைதான். பாலுவுடன் நான் படப்பிடிப்பில் இருக்கும் போது என் மகன் அந்த சகாப்தத்துடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அவர் இசை வாழும் வரை அவர் கொண்டாடப்படுவார்.
ரவிதேஜா: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்தியக் குடும்பங்களில் ஒரு அங்கம். அவரது குரலும், இசைக்கு அவரது பங்காற்றலும் என்றும் நீடித்திருக்கும். ஒவ்வொரு மனித உணர்ச்சிக்கும் பாடல்கள் பாடியிருக்கும் அந்த சகாப்தத்தின் ஆன்மா சாந்தியடையட்டும். உங்கள் இழப்பை என்றும் உணர்வோம்.
ஜுனியர் என்.டி.ஆர்: இந்திய இசை அதற்கு மிகவும் பிடித்த மகனை இழந்துவிட்டது. நொறுங்கிப் போயிருக்கிறேன். ஐம்பது வருடங்களைத் தாண்டிய ஒரு இசை சகாப்தம் எஸ்பிபி. 40,000 பாடல்களுக்கு மேல் உயிர் கொடுத்திருக்கிறார். இந்த உலகில் இசை இருக்கும் வரை நீங்கள் வாழ்வீர்கள் சார்.
வெங்கடேஷ்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவைப் பற்றிய செய்தி கேட்டு அதிக வருத்தமடைந்தேன். நாம் இன்று ஒரு சாதனையாளரை இழந்திருக்கிறோம். ப்ரேமா, பவித்ரா பந்தம் உள்ளிட்ட எனது சிறந்த படங்களில் அவரோடு பணியாற்றும் பெருமை எனக்குக் கிடைத்தது. நீங்கள் விட்டுச் சென்ற மரபு என்றும் வாழும் சார். அவரது குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள்.