சினிமா தொழிலாளர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்த்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தெலுங்குத் திரைப்படத்துறையில் அந்த ஊதிய உயர்வு உயர்த்தப்படவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் தெலுங்கு திரைப்படத் துறையின் தொழிலாளர் கூட்டமைப்பு, 30 சதவிகித ஊதிய உயர்வு கேட்டு கடந்த 4ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியது. இதனால் அங்கு திட்டமிடப்பட்ட மற்ற படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டம் தொடர்பாக தொழிலாளர் கூட்டமைப்பிற்கும் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபைக்கும் பிரச்சனை உருவானது. இதையடுத்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் தெலுங்கின் சீனியர் நடிகரான சிரஞ்சீவியை நேரில் சந்தித்து பிரச்சனை குறித்து தீர்வு காண கேட்டுக் கொண்டிருந்தனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 18 நாட்களாக நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இந்த பிரச்சனையை சுமுகமாகத் தீர்த்து வைத்ததாக சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர், அனில் வல்லபனேனி கூறுகையில், “எங்களின் முதன்மையான கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் நீண்ட விவாதங்களை நடத்தினோம். அதில் தெலுங்கு திரைப்படத் துறையின் அவல நிலையை புரிந்தது. அதனால் போராட்டத்தை நாங்கள் வாபஸ் பெறுகிறோம்
அவர்கள் இறுதியாக 22 சதவீத ஊதிய உயர்வை இரண்டு அடுக்குகளாகத் தர முன்வந்துள்ளனர். இதன் மூலம் இரண்டாயிரத்திற்கும் குறைவான ஊதியத்தைப் பெறும் தொழிலாளர்கள், அடுத்த முதல் வருடத்தில் 15 சதவீத உயர்வுடன் ஊதியம் பெறுவார்கள். அடுத்த ஆண்டில் அந்த ஊதிய உயர்வு 2.5 சதவீதமாக உயரும். அதற்கடுத்த ஆண்டில் அதே ஊதியம் 5 சதவீதமாக உயரும். அதே போல் இரண்டாயிரம் தொடங்கி ஐந்தாயிரம் வரை வாங்குபவர்கள் முதல் ஆண்டில் 7.5 சதவீதமும் தொடர்ந்து அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் தலா 5 சதவீதம் உயரும். இந்த முடிவில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்றார். இதையடுத்து தெலுங்கில் வழக்கம் போல் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/22/08-2025-08-22-18-07-58.jpg)