விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில், கழுகு இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”. இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..
தயாரிப்பாளர் பாண்டியன் எனக்கு நெருங்கிய நண்பர், என் படத்தில் மேலாளராக வேலை பார்த்தவர். ஒரு நாள் வந்து படம் செய்யப் போகிறேன் என்றார். எப்படி எனக் கேட்டேன், சசிக்குமார் சார் உதவுவதாகச் சொன்னார். சத்ய சிவா இந்தக்கதையைச் சொன்ன போது, இந்தப்படத்தை நான் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன், அப்படி ஒரு நல்ல கதை. இப்படம் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கு இந்த குழு தான் காரணம். அவர்கள் உழைப்பு படத்தில் தெரிகிறது. சசிக்குமார் மிக உண்மையான மனிதர். முன்பெல்லாம் ஃபர்ஸ்ட் காப்பி இருந்தால் ரிலீஸ் ஆகிவிடும் ஆனால் இன்று ஃபர்ஸ்ட் காப்பி ரெடியானாலும் பல ரைட்ஸ் காரணமாகப் படம் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது.
இன்றைக்கு ஓடிடி சொல்லும் தேதியில் தான் ரிலீஸ் ஆகிறது. சசிக்குமார் மாதிரி விட்டுக்கொடுத்துப் போகும் போது, படம் ரிலீஸ் செய்ய முடியும். எல்லோரும் அதைச் செய்ய வேண்டும். உண்மையாகக் கஷ்டப்பட்ட ஒரு சமூகம், தங்களது சுதந்திரத்திற்காகப் போராடியது தான் இந்தக்கதை, இந்தியாவில் உண்மைச் சம்பவத்தை, உண்மையை எடுப்பது கஷ்டம். உண்மையை எடுத்தால் எதிர்க்கட்சிக்கும் வலிக்கும், ஆளுங்கட்சிக்கும் வலிக்கும் அதனால் தான் நான் உண்மைச் சம்பவத்தினை எடுப்பதில்லை. ஆனால் இப்படத்தில் மிக அழுத்தமான உண்மையை, மிகச்சிறப்பாக எடுத்துள்ளார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.