தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் ‘மிராய்’. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில், தேஜா சஜ்ஜா பேசியபோது, “மிராய் திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி வெளியாகிறது. ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் தான் மிராய். ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன. அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். 3 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள். மிராய், என்றால் ‘எதிர்காலத்தின் நம்பிக்கை’ என்று அர்த்தம். படத்தில் இன்னொரு அர்த்தம் உள்ளது; அது ஒரு ட்விஸ்ட் மூலம் தெரியவரும்.
மேலும், இப்படத்தை நாங்கள் சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் தயாரித்துள்ளோம். காரணம், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இந்திய படங்களுக்கு மார்க்கெட் அதிகம் உள்ளது. இதற்கு முன் வெளியான ஹனுமான் திரைப்படமும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வி.எஃப்.எக்ஸ். பெரும் சவாலாக இருந்தது. இந்தியத் திரைப்படங்களின் தரம் சர்வதேச தரத்திற்கு உயர வேண்டும் என்பதற்காக அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரைக்கதை மற்றும் வி.எஃப்.எக்ஸில் அதிக திறன் கொண்ட இயக்குனர்கள் பிரசாந்த் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்றார்.