பிரபல அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விஃப்ட், அமெரிக்க கால்பந்து வீரரான ட்ராவிஸ் கெல்ஸை நீண்ட காலமாக காதலித்து வந்தார். அவருடன் திருமண நிச்சய்தார்த்தம் நடந்துள்ளதாக கடந்த 26ஆம் தேதி அறிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் தேர்வை ரத்து செய்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
அந்த வீடியோவில், மாணவர்கள் முன் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் திடீரென, டெய்லர் ஸ்விஃப்ட் நிச்சயதார்த்த புகைப்படங்களை காண்பித்து, இந்த அறிவிப்பால் என்னால் வகுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை, அதனால் நடக்கவிருந்த பயோ-கெமிஸ்ட்ரி தேர்வை ரத்து செய்கிறேன், எல்லாரும் கிளம்புங்கள் என்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த ஆசிரியரை பாராட்டி பல மாணவர்கள் பதிவிட்டு வந்தனர். அதே சமயம் அவரை எதிர்த்தும் சிலர் கருத்துகளை கூறி வந்தனர். அதாவது ஒரு பாடகி நிச்சயதார்த்தத்திற்காக தேர்வை ரத்து செய்வதா எனக் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் மற்றும் அவர் வேலை பார்க்கும் பள்ளி நிர்வாகம், அந்த வீடியோ பாப் கலாச்சாரத்தின் தண்மையை விளக்கும் விதமாக நகைச்சுவையாக எடுக்கப்பட்டதென விளக்கமளித்துள்ளனர். அதாவது ஒரு செய்தி உலகளவில் எந்தளவு கவனத்தை ஈர்க்கும், அதே சமயம் அது எந்தளவு ட்ரெண்டிங்காக அமையும் என்பதை உணர வைக்கும் வகையில் திட்டமிட்டு எடுக்கப்பட்டது என அந்த ஆசிரியர் கூறியுள்ளார். பள்ளி நிர்வாகம், அந்த ஆசிரியர், சமூக ஊடகங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு இணைப் பேராசிரியர் என தெரிவித்துள்ளது.