tapsee about vinesh phogath disqualified

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரிஸ்டைல் பிரிவில் இந்தியா சார்பில் களமிறங்கிய வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் என்பவருடன் மோதி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்தார். ஆனால் தற்போது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் எடை 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பேரதிர்ச்சியை எழுப்பி உள்ளது.

Advertisment

ஒலிம்பிக் வீராங்கனை வினேஷ் போகத், தகுதி நீக்கத்திற்கு முன்பு அவர் தனது உடல் எடையைக் குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதனால் அவர் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா கொடுத்த பேட்டியில், “வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சி தருகிறது. இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் அவருக்குத் துணையாக இருக்கும் என உறுதியளித்து இருக்கிறேன். அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றோம்” என்று உறுதியளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, முன்பு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் “வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்குப் பின்னால் சதி இருக்கிறது என்றும் இந்தியா விளையாட்டில் சிறந்த நாடாக உயர்வதை விரும்பாத சிலர் சதி செய்திருக்கின்றனர்”என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Advertisment

இதனிடையே பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் எனப் பலரும் வினேஷ் போகத்துக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை டாப்சி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் இந்த விவகாரம் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், “வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் மன வேதனையளிக்கிறது. ஆனால் நேர்மையாக இந்த பெண் ஏற்கனவே தங்கத்தைத் தாண்டி தனது முத்திரையை பதித்துள்ளார்” என்று ஆறுதலைப் பகிர்ந்துள்ளார்.