சசிகுமார் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான ‘பலே வெள்ளையத் தேவா’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன். பின்பு அருள்நிதியுடன் ‘பிருந்தாவனம்’, விஜய் சேதுபதியுடன் ‘கருப்பன்’, உதயநிதியுடன் ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்திருந்தார். கடைசியாக அர்ஜூன் தாஸ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘ரசவாதி’ படத்தில் நடித்திருந்தார். இப்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ரெட்ட தல’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் பணிகள் நடந்து வருகிறது.
மறைந்த நடிகர் மலேசியா ரவிச்சந்திரனின் பேத்தியான இவர் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவருடன் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபடி ஒரு புகைபப்டத்தை பகிர்ந்திருக்கும் அவர், ஒளிப்பதிவாளர் கௌதம் தான் தன் காதலரென தெரிவித்துள்ளார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
தன்யா ரவிச்சந்திரன் - கௌதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் சித்தி இட்னானி, ஷிவாத்மிகா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் ரசிகர்கள் பலரும் தன்யா ரவிச்சந்திரன் பதிவின் கீழ் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர்.