இந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான தனுஸ்ரீ தத்தா தமிழில் விஷாலின் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ‘மீ டூ’ விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட சமயத்தில் பாலிவுட் நடிகர் நானா படேகர் மற்றும் மூன்று பேர் மீது பாலியல் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவை அனைத்தும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், தான் துன்புறுத்தப்படுவதாக அழுதுக் கொண்டே வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “என் சொந்த வீட்டிலேயே நான் துன்புறுத்தப்படுகிறேன். இப்போது தான் போலிஸுக்கு ஃபோன் செய்தேன். அவர்கள் முறையாக காவல் நிலையத்தில் வந்து புகார் கொடுக்க சொன்னாங்க. அதனால் அங்கு செல்ல இருக்கிறேன். எனக்கு உடல்நிலை சரியில்லை. கடந்த 4-5 வருடங்களாக நான் மிகவும் சித்திரவதைக்கு உள்ளானேன். அது என் உடல்நிலையைப் பாதித்துள்ளது.
நான் பணிப்பெண்களை வேலைக்கு சேர்க்க முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே பணிப்பெண்களை நியமித்துள்ளார்கள். அவர்களுடன் எனக்கு மோசமான அனுபவங்கள் தான் நடந்துள்ளது. அவர்கள் திருட்டு உள்ளிட்ட மோசமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அதனால் என் வேலையை நானே செய்ய வேண்டியிருக்கிறது. என் சொந்த வீட்டிலேயே சிரமத்துக்கு உள்ளாகிறேன் தயவு செய்து எனக்கு யாராவது உதவுங்கள்” என்றார். மேலும் 2018ல் ‘மீ டூ’ விவகாரத்துக்கு பிறகு இது நடந்து வருவதாகவும் ஏற்கனவே தாமதமாகிவிட்டது, யாராவது வந்து காப்பாத்துங்க என்று அந்த வீடியோவின் கேப்ஷனில் பதிவிட்டுள்ளார்.
அதே போல் மற்றொரு பதிவில், வீட்டிற்கு மேலே இருந்தும், வெளியில் இருந்தும் பலமான சத்தம் கேட்கிறது என்றும் இந்த துன்புறுத்தலை கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து சந்தித்து வருகிறேன் என்றும் கூறினார். இவரது இந்த பகீர் வீடியோ தற்போது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.