
தமிழில் விஷாலின் 'ஆக்ஷன்' படத்தில் கடைசியாக நடித்திருந்த தமன்னா தற்போது இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே 3 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் தற்போது ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நெல்சன் இயக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் மூலம் முதல் முறையாக ரஜினி படத்தில் நடித்துள்ள தமன்னா, ரஜினியுடன் நடித்த மகிழ்ச்சியை ஏஎன்ஐ செய்தி முகமையில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ரஜினியுடன் பணியாற்றியது கனவு நனவான தருணம். ரஜினி எனக்கு ஆன்மிகப் பயணத்திற்கான புத்தகத்தை பரிசளித்தார். மேலும் அதில் கையெழுத்து கூட போட்டிருந்தார். ஜெயிலர் படப்பிடிப்பில் நான் கழித்த நாட்களின் நினைவுகளை எப்போதும் நினைத்து பார்த்து ரசிப்பேன்" என்றார்.