
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம், தனி திரையரங்குகளின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில், "மல்டிபிளக்ஸ் மற்றும் தனி திரையரங்குகளுக்கு ஒரே அளவில் மின்சார கட்டணம், சம்பளம் என அனைத்தும் ஒரே வகையில் உள்ளது. எனவே, தனி திரையரங்குகளின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
தற்போது மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 190 ரூபாய் மற்றும் தனி திரையரங்குகளுக்கு 120 ரூபாய் என சினிமா டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை 190 ரூபாய் ஆக்கி சமநிலைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், ஏசி வசதி கொண்ட திரையரங்குகளில் தற்போது நான்கு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதை 10 ரூபாய் எனவும் ஏசி அல்லாத திரையரங்குகளில் இரண்டு ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதை ஐந்து ரூபாய் எனவும் மாற்றி அமைக்க வேண்டும் என பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். சினிமா ஆபரேட்டர்களின் தேர்வு பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. எனவே, ஆபரேட்டர்களின் பற்றாக்குறை உள்ளது எனவும் சுட்டிக்காட்டி உள்ளார்.
அதோடு பெரிய திரையரங்குகளை சிறிய திரையரங்குகளாக மாற்ற பொதுப்பணித் துறை அலுவலகத்தில் உரிமம் பெற்றால் போதும் என்ற முறையை கொண்டு வர வேண்டும், C படிவ உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுபிக்க அனுமதி வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே முன்னதாக சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்க கோரி திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளித்துள்ளது. அதன் படி வரும் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 7 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட உள்ளன.