தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் சலசலப்பு - எஸ் ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் வெளிநடப்பு

tamil film producers counil meeting S. A. Chandrasekhar and others walked out

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (18.09.2022) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர்அரங்கத்தில் நடைபெற்றது. 2022-ஆம் ஆண்டிற்கான நடைபெற்ற இந்த கூட்டத்தில்,சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையில் துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ்ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இருபது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது தேர்தலில் போட்டியிடுவதற்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவோர், இதற்கு முன்பு ஒருமுறை நிர்வாகியாகவோ அல்லது 2 முறை செயற்குழு உறுப்பினராகவோ இருந்திருக்க வேண்டும் எனவும், 2 திரைப்படங்களை தயாரித்து, அதை குறைந்தபட்சம் 25 திரையரங்குகளில் வெளியிட்டிருந்தால் மட்டுமே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சங்க விதிகளில் திருத்தம் செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து சிலர், தீர்மானத்திற்கு எதிராகவும், தேர்தல் தேதியை அறிவிக்கக்கோரியும் முழக்கமிட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்பு புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ் ஏ.சந்திரசேகர், ஜேஎஸ்கே.சதீஷ், ஆர்வி.உதயகுமார் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.

பின்பு செயலாளர் ராதாகிருஷ்ணன், "95 சதவீதம் ஆதரவு இருந்தது. 5 சதவீதம் இல்லை. அந்த 5 சதவீதம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தோல்வி பெற்று மற்றொரு சங்கம் ஆரம்பித்தவர்கள். அதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். எனவே அதனை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை" என பேசினார்.

Tamil Film Producers Council
இதையும் படியுங்கள்
Subscribe