
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இந்த ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டத்தை நேற்று (18.09.2022) நடத்தியது. சென்னை தேனாம்பேட்டை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமை வகித்தார். மேலும் துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ்ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் இருபது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அகில் முக்கியமானவை சில,
1. திரைப்பட விமர்சனங்கள், அதன் வெளியீட்டு தேதியில் இருந்து மூன்று நாட்கள் கழித்து சமூக வலைதளங்களில் எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
2. திரையரங்குகளில் படம் பார்த்தபின் கருத்து கேட்பதற்காக கேமராக்களை திரையரங்குகளுக்கு உள்ளே அனுமதிக்க வேண்டாம் என திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்டுக் கொள்கிறது
3. டிக்கெட்டுகளை சென்டர்லைஸ் சர்வர் மூலம் மானிட்ரிங் செய்து டிக்கெட் விற்பனை செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
4. சிறுமுதலீட்டு திரைப்படங்களை சங்கத்தின் வர்த்தக அறக்கட்டளை மூலம் ஓடிடி தளத்தில் வெளியிட்டு தயாரிப்பாளர்கள் பயனடையும் வண்ணம் வழிவகை ஏற்பாடு செய்யப்படும்.
5. திரைப்படங்களையும், நடிகர், நடிகையர் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் மீது தனிப்பட்ட முறையில் அவதூறாக செய்தி பரப்பும் ஊடகவியலாளர்களுக்கு எந்தப் பேட்டியும் தருவதைத் திரைத்துறையினர் தவிர்க்குமாறு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தில், மூன்று நாள் கழித்து படங்களின் விமர்சனங்கள் எழுதுவது தொடர்பாக ஒரு கருத்து நிலவி வருகிறது. அதாவது, யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் படம் வெளியானது முதல் நொடிக்கு நொடி விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், பல திரைப்படங்கள் வணிக ரீதியாக படுதோல்வி அடைகிறதாக சொல்லப்படுகிறது. மேலும், திரைப்படங்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் வெளியாவதால்,ஞாயிற்றுக்கிழமைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியானால், அது படத்தின் வசூலை பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.