
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தற்போது 'தேனாண்டாள் ஸ்டுடியோஸ்' முரளி ராமசாமி தலைமையில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வரும் நிலையில் தற்போது 2023 - 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஜனவரி 23ம் தேதி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், சங்கத்தின் விதிப்படி 2023-2026 ஆம் ஆண்டிற்கான நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 26.3.2023 ஆம் தேதியன்று ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் நடத்தலாம் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்.23 காலை 11 மணி முதல் பிப்.26 மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை 2.3.2023 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைத் திரும்பப் பெற 05.03.2023 கடைசி தினம். அன்றைய தினம் மாலை 6 மணி அளவில் இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மார்ச் 26ல் நடத்தப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.