Skip to main content

கண் கலங்கிய கமல்... மௌனமாக இருந்த சூர்யா... கிரேசி மோகன் இறுதி அஞ்சலி

நாடக ஆசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகங்களைக் கொண்ட கிரேசி மோகன் மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.
 

crazy mohan


 

திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேசி மோகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிரேசி மோகனுக்கு மனைவி நளினி, மகன்கள் அஜய், அர்ஜுன் உள்ளனர்.

நாடகங்களில் இவர் படைத்த மாது, ஜானு, சீனு உள்ளிட்ட கதாபாத்திரங்கள் புகழ்பெற்றவை. அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, பஞ்ச தந்திரம் உள்ளிட்ட 40க்கும் அதிகமான படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ளார். திரைத் துறையைச் சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை மந்தைவெளி அம்மணி அம்மாள் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.

பின்னர் கிரேசி மோகனின் உடல் மந்தைவெளியிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இறுதிச்சடங்குகளுக்காக பெசண்ட் நகர் மின் மயானத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது கமல் ஹாசன், நடிகை பூஜா குமாரும் மயானத்திற்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மிகவும் அமைதியாக கண் கலங்கியவாரு தன்னுடைய நண்பரான கிரேசி மோகனின் உடலை பார்த்து இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார் கமல்ஹாசன்.பிறகு கிரேஸி மோகனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இசையமைப்பாளர் தேவா, “ அவர் மிகப்பெரிய காமெடி எழுத்தாளர் ஆனாலும் என்னை போல சாதாரனமான ஒருவர் ஒரு காமெடி சொன்னாலும் அதை நன்கு உணர்ந்து சிரிப்பவர். ஒரு நல்ல மனிதரை நாம் நிச்சயமாக இழந்துவிட்டோம்” என்றார்.
 

crazy mohan


பாண்டியராஜன், “அவரிடம் எனக்கு ரொம்ப பிடித்தது நல்ல ஒரு குடும்பஸ்தன். தன் தம்பியின் மீது மிகவும் பாசம் வைத்திருக்க கூடியவர்” என்றார்.

பாஸ்கி, “மற்றொருவருடைய சாதனையை சந்தோஷமாக பாராட்டக்கூடிய தன்மை அவரிடம் உண்டு. ஹூமர் உன்கிட்ட இருக்கு விடாத எழுது எழுதுனு சொல்லி என்ன ஹூமர் பண்ண வைத்த குரு என்று அவரை சொல்லலாம். அனைத்து வயதுடையவர்களிடமும் சகஜமாக பேசக்கூடியவர். அவரை லெஜண்ட் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.

இயக்குனர் பாரதிராஜா, “எனக்கு அவரை நாடக மேடையிலிருந்தே தெரியும். நய்யாண்டி, கிண்டலை நாடகத்திலும் சரி, திரைப்படத்திலும் அடுத்தவர்களை ஊணப்படுத்தாமல் எழுதுவார். அதுதான் அவருடைய சிறப்பு. நாடகத்துறையில் எவ்வளவு முத்திரை பதித்தாரோ, அதைபோல திரைப்பட முத்திரை பதித்திருக்கிறார். அடுத்தவர்களை புண்படுத்தாத ஒரு நய்யாண்டி. அவருடைய இழப்பை வார்த்தைகளால் சொல்லவே முடியாது” என்றார்.

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்,  “நானும் கிரேசி மோகனும் ஒன்றாக இணைந்து ஆறு படங்கள் பணிபுரிந்தோம். மறக்கமுடியாத நினைவுகள் நிறையவே இருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டிலும் அவருடைய இன்புட்கள் நிறையவே இருக்கிறது. நாம்ப சும்மா சொல்லிக்கலாம் மிகப்பெரிய இழப்புனு... நாட்டுக்கு இழப்பு, மக்களுக்கு இழப்பு அப்படினு சொல்லிக்கலாம். ஆனால், உண்மையிலேயே மிகப்பெரிய இழப்பு அவங்க குடும்பத்திற்குதான்” என்றார்.

இயக்குனர் வசந்த், “ எனக்கு பொய்க்கால் குதிரை படம்தான் முதல் படம், அவருக்கும் அந்த படம்தான் முதல் படம். அவர் எழுதின மேரேஜ் மேட் இன் சலூன் என்கிற நாடகத்தைதான் என்னுடைய குரு நாதர் பொய்க்கால் குதிரை என்று படமாக இயக்கினார். அந்த படத்தில்தான் நான் முதன் முறையாக உதவி இயக்குனராக பணியாற்றினேன். கிரேசி மோகன் முதன் முறையாக படத்தில் கதாசிரியராக பணி புரிந்தார். அந்த காலகட்டத்திலிருந்து எங்களுக்கு நட்பு உண்டு, எனக்கு மிகவும் பிடித்த மனிதர். பாராட்டுவதில் கஞ்சத்தனமே அவரிடம் கிடையாது. வள்ளல் போல பாராட்டுவார். எதையும் ரசித்து செய்வார், ரசித்து பாராட்டுவார்”என்றார்.
 

surya

 


நடிகர் சூர்யாமௌனமாகவே வந்து செய்தியாளர்களிடம் ஏதும் பேசாமல் அங்கிருந்து விடைபெற்றார், மலையாள நடிகர் ஜெயராமன், பாடகர் ஸ்ரீனிவாஸ், ஏ.வி.எம் சரவணன், நிழல்கள் ரவி, ஆர்த்தி, கணேஷ் உள்ளிட்டோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

 

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்