Skip to main content

"ஆல்ஃபி இருந்தால் அந்த இடம் கலகலக்கும். ஆனால் இப்போது..." - தமிழ் இசையமைப்பாளர்களை கலங்க வைத்த மரணம்!

Published on 29/12/2020 | Edited on 30/12/2020
alfred kanth

ஆல்ஃப்ரட் காந்த்

 

நேற்று தமிழ் திரை இசையுலகத்துக்கு ஒரு சோகமான நாள். இன்று உலகமே  கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை வளர்த்து உருவாக்கி நமக்குத் தந்த அவரது தாயார் கரீமா பேகம் மரணமடைந்தார். அவரது துயரை தமிழ் திரைப்பட இசையுலகம் பகிர்ந்து கொண்ட அதே வேளையில் இன்னொருவரின் மரணம் குறித்தும் பல இசையமைப்பாளர்களும் மிகுந்த சோகத்துடன் தங்களது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். "இசையுலகத்துக்கு மிகப்பெரிய இழப்பு" என்று சந்தோஷ் நாராயணனும், "சித்தப்பா... ஒரு திறமையான இசை ஆசிரியரை இழந்துவிட்டோம்" என்று ஜஸ்டின் பிரபாகரனும் கூறியிருக்கிறார்கள். இன்னும் பல இசையமைப்பாளர்களும் இசைக்கலைஞர்களும் அவர் குறித்து எழுதியிருந்தனர். அவர், இசைக்கலைஞர் ஆல்ஃப்ரட் காந்த். கரோனா, இந்த நல்ல கலைஞரின் உயிரை பறித்துக்கொண்டது.

 

'ஆல்ஃபி' என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஆல்ஃப்ரட் காந்த் குறித்து இசையமைப்பாளர்கள் சத்யா மற்றும் அருள்தேவ் இருவரிடமும் பேசினோம். "பார்த்திபன் சாரின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்துக்காக வெளிநாட்டிலிருந்து இசைக்கலைஞர்களை வரவழைத்து பணிபுரிந்தபோது, ஆல்ஃபிதான் நோட்ஸ் எழுதிக்கொடுத்து, அவர்களை ஒருங்கிணைத்துப்  பணியாற்றுவதில் மிகுந்த உதவியாக இருந்தவர். அவருக்கு இசையில் மிகப்பெரிய ஞானம் உண்டு, பல விஷயங்கள் தெரிந்தவர். தெரிந்த அனைத்து விஷயங்களையும் பிறருக்குத் தயக்கமே இல்லாமல் கற்றுக்கொடுத்தவர். அவர் வந்தால் அந்த இடமே கலகலக்கும். அவ்வளவு இசை அறிவு இருந்தும் அதை அவர் பணமாக்கவில்லை. மருத்துவமனையில் இருந்தபோது தினமும் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவானது. சிரமப்பட்டு நண்பர்களின் உதவியுடன் சிகிச்சை தந்தார்கள். ஆனாலும் உயிரை காப்பாற்றமுடியவில்லை" என்று மிகுந்த துயருடன் பேசினார் இசையமைப்பாளர் சத்யா.

 

alfred with santhosh narayanan

ஆல்ஃபி - சந்தோஷ் நாராயணன் - டெல்ஃபீ

 

"மதுரையிலிருந்தே நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குப் பேசிப் பேசித் தீராத பல விசயங்கள் இருந்தது. இசை குறித்தும் வேறு பல விஷயங்கள் குறித்தும் நிறைய பேசுவோம். ஆல்ஃபி, நம்ம மியூசிக் டைரக்டர்ஸ் பலரோட குழந்தைகளுக்கு இசை கற்றுக்கொடுக்கும் மாஸ்டரா இருந்தார். ஹாரிஸ், சந்தோஷ், சத்யா மற்றும் என் குழந்தை உள்பட பலரும் பல்வேறு காலகட்டங்களில் அவரிடம் இசை கற்றுக்கொண்டார்கள். சினிமா உலகத்தில் கொஞ்சம் கூட தந்திரமில்லாத, சூதுவாது இல்லாத ஒரு நல்ல உள்ளம் ஆல்ஃபி. அவரது தந்தை ஃப்ரெட்ரிக் மதுரை கீழவாசல் தேவாலயத்துக்கு பல பாடல்களை உருவாக்கித் தந்துள்ளார். அவரும் எக்கச்சக்கமான பக்திப் பாடல்களை உருவாக்கியுள்ளார். இவ்வளவு கலகலப்பான, நல்ல மனசு கொண்ட ஆல்ஃபி, இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுப் போவார்னு நினைக்கல. நேற்று அதிகாலையே எனக்கு விழிப்பு வந்தது. ஆல்ஃபி நினைப்பாவே இருந்தது. 'நான் கரோனாவை ஜெயிச்சுட்டேன், எமனை ஜெயிச்சு வந்துட்டேன்'னு தன்னோட சத்தமான சிரிப்போடு ஆல்ஃபி சொல்வது போல ஒரு பிரம்மை. எல்லாத்தையும் பொய்யாக்கும்படி மதியம் அவரோட மரண செய்தி வந்தது" என்று அவரது நினைவுகளை பகிர்ந்தார் இசையமைப்பாளர் அருள்தேவ்.

 

ஆல்ஃப்ரட் காந்த்தின் மகன் டெல்ஃபீ ஒரு கிட்டாரிஸ்ட். பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றுகிறார். இளம் வயதிலேயே மிகுந்த திறமை வாய்ந்த இவர், தனது தந்தை அனைவரிடம் பெற்ற அன்பையும், மிகப்பெரிய வெற்றியையும் பெறுவார் என மிகுந்த நம்பிக்கையுடன் ஒரே குரலில் இருவரும் கூறினர். அது நடக்கவேண்டும், ஆல்ஃபியின் ஆன்மா அமைதிகொள்ள வேண்டும்.

 

                                          

சார்ந்த செய்திகள்

Next Story

சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டிற்கு மாஜா நிறுவனம் விளக்கம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Maajja Company Explains Santhosh Narayanan's Allegation regards enjoy enjaami issue

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘தெருக்குரல்’ அறிவு, தீ ஆகியோரின் குரலில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான சுயாதீன ஆல்பம் ‘என்ஜாய் எஞ்சாமி’. இப்பாடலுக்கு ‘தெருக்குரல்’ அறிவு வரிகள் எழுதியிருந்தார். சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் அறிமுகப்படுத்திய மாஜா தளத்தின் யூட்யூப் சேனலில் இப்பாடலின் வீடியோ வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது வரை யூட்யூபில் 487 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 

இப்பாடல் தொடர்பாக ‘தெருக்குரல்’ அறிவுக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் சர்ச்சை இருந்தது. ஒரு பிரபல இதழில் ‘என்ஜாய் எஞ்சாமி' பாடல் குறித்து செய்தி வெளியான நிலையில், அதில் அறிவு பெயர் இடம்பெறாதது சர்ச்சையானது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில், ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். அப்போது இப்பாடலை எழுதி அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது தொடர்பாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப பின்பு அது சர்ச்சையானது. இது தொடர்பாக இருவரும் மாற்றி மாற்றி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த சூழலில், கடந்த 5 ஆம் தேதி சந்தோஷ் நாராயணன் இப்பாடல் மூலம் 1 பைசா கூட வருமானம் வரவில்லை என அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “இந்தப் பாடலின் 100 சதவீத உரிமைகள், வருவாய்கள் மற்றும் ராயல்டிகளை நாங்கள் வைத்திருக்கிறோம். ஆனால் இப்பாடல் மூலம் நான், அறிவு, தீ ஆகிய மூன்று பேரும் இன்று வரை எவ்வளவு வருமானம் பெற்றுள்ளோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது நாள் வரையில் 1 பைசா கூட எங்களுக்கு வரவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம். எனது யூட்யூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிளுக்கே செல்கிறது” எனப் பேசினார். இது இசைத்துறையில் பரபரப்பை கிளப்பியது. 

இதையடுத்து மற்றொரு பதிவில், “என் பாசத்துக்குரிய ஏ.ஆர். ரஹ்மான் சார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த மாஜா விவகாரத்தில் எப்போதுமே ஆதரவுத் தூணாகவே இருந்துள்ளார். அவரும் இந்த பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தீய நோக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், சந்தோஷ் நாராயனன் குற்றச்சாட்டிற்கு மாஜா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நோயல் கீர்த்திராஜ் வெளியிட்ட அறிக்கையில், “சமீபத்திய அவதூறான குற்றச்சாட்டுகளை மறுத்து மாஜா நிறுவனத்தின் பதில் அறிக்கை. சுயாதீன இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே மாஜா நிறுவனம். எங்களின் முதல் வெளியீடான என்ஜாய் என்ஜாமியின் வெற்றி எமக்கும் இந்த பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதையடுத்து, இந்த சாதனையைப் படைத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். துரதிர்ஷ்டவசமாக இந்தப் பாடலின் வெற்றிக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே இருந்த சில முரண்பாடான கருத்துக்களால் இந்த வெற்றி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சமீபத்திய தவறான குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். சுயாதீன கலைஞர்களின் படைப்புகள் மற்றும் சுயாதீன இசைக்கான எங்கள் அர்ப்பணிப்புகளில் நாங்கள் பொறுப்புடன் இருக்கிறோம். மேலும் நாங்கள் எங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்றாமல் அல்லது கலைஞர்களிடமிருந்து அவர்களுக்கான வருமானங்களை நிறுத்தி வைக்கும் செயல்களை செய்யவில்லை. இருப்பினும், நாங்கள் நம்பியிருந்தது போல் சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே பாடலுக்கான பங்களிப்பு பற்றி ஒருமித்த கருத்து இல்லை. அது தவிர, கலைஞர்களின் ஒப்பந்த கடமைகளின்படி, அவர்களின் நேரடி ஈடுபாடுகள் மற்றும் நேரடியாக சேகரிக்கப்பட்ட வருமானம் பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தாலும் அதற்கான எந்த வெளிப்பாடுகளோ அல்லது அறிக்கைகளோ எங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தச் செயற்பாடுகளால் நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் முயற்சிகள் சிக்கல் நிலையிலுள்ளது.

இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட இரு கலைஞர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. அது தவிர, அவர்கள் சார்பாக கணிசமான செலவுகளையும் மாஜா நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கும் இந்தச் சிக்கல் நிலை நியாயமாகவும் விரைவாகவும் தீர்க்கப்படுவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டுள்ளோம். சமீபத்திய அவதூறான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு உரிய வழிகளில் அவற்றை நிவர்த்தியும் செய்வோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

'உங்கள் மாமனார் காலத்திலிருந்து இன்று உங்கள் பேரப்பிள்ளைகள் வரை'-கொதித்தெழுந்த ஜேம்ஸ் வசந்தன்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 'From the time of your father-in-law to your grandchildren today'-boiled James Vasanthan

'தாங்கள் கனடாவில் வீடு இல்லாமல், கார் இல்லாமல் கஷ்டப்பட்டபோது தேவதூதர் ஒருவர் கனவில் வந்து, கார் வாங்க உதவி செய்தார்' என பால் தினகரனின் மனைவி இவாஞ்சலின் வெளியிட்ட வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்த ஜேம்ஸ் வசந்தனின் பதிவில்,

'இவாஞ்சலின் பால் தினகரன் அவர்களுக்கு,

அண்மையில் நீங்கள் பேசியிருந்த ஒரு காணொளி என் கவனத்துக்கு வந்தது. இந்தக் குறிப்பிட்ட காணொளி கிறிஸ்தவர் மட்டுமல்லாது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் அது நேர்மறையான காரணத்துக்காக அல்ல; ஏளனத்துக்கும் நகைப்புக்கும்.

இந்தக் கேலியும் கிண்டலும் உங்களைப் பற்றியோ, உங்கள் குடும்பத்தைப் பற்றியோ தனிப்பட்ட விதத்தில் இருந்திருந்தால் என்னை ஒன்றும் பாதித்திருக்காது. உங்களுக்காக கொஞ்சம் பரிதாபப்பட்டுவிட்டு, என் வேலையைப் பார்த்திருப்பேன். ஆனால், அது ஆண்டவரையும், ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் தவறாகக் காட்டியதால் இந்தப் பகிர்வு.

உங்கள் குடும்பம் எவ்வளவு செல்வாக்கான குடும்பம் என்பது உலகத்துக்கே தெரியும். புகழிலும், பேரிலும் மட்டுமல்ல; பணத்திலும், சொத்திலும்தான். பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு நீங்கள் அதிபதி என்பது ஊரறிந்த ரகசியம். உங்கள் மாமனார் காலத்திலிருந்து இன்று உங்கள் பேரப்பிள்ளைகள் வரை அத்தனை பேரும் எப்படிப் படாடோபமான செல்வச் செழிப்பில் திளைக்கிறவர் என்பது மறைக்கவே இயலாத உண்மை. உலகப் பணக்காரர் பட்டியலில் ஏன் உங்கள் குடும்பத்தின் பெயர் வருவதில்லை என்று நாங்கள் வியப்பதுண்டு!

 'From the time of your father-in-law to your grandchildren today'-boiled James Vasanthan

உங்கள் குடும்பம் எதற்கு, எப்படி கனடா நாட்டுக்குச் சென்றது; அந்தக் குடியுரிமை எப்படி வாங்கினீர்கள்; பின் எதற்காக, எப்படி அமெரிக்காவுக்கு மாற்றலாகிச் சென்றீர்கள்; இன்று டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரத்தில் எவ்வளவு பெரிய வீட்டை வாங்கிக் குடியிருக்கிறீர்கள்; வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்த செய்தியை எவ்வளவு ரகசியமாக பல ஆண்டுகள் ஒளித்து வைத்தீர்கள்; அவர்களுக்குத் தெரிந்தால் உங்கள் பலகோடி வருமானம் போய்விடும் என்பதால் அதிகப் படிப்போ, உலக அறிவோ இல்லாத பல இலட்ச பாமர விசுவாசிகளை எப்படி இங்கிருப்பது போலவே ஏமாற்றி வந்தீர்கள் என்பவை போன்ற பல தகவல்களை மேல் மட்டக் கிறிஸ்தவர் அறிவர்.

இந்தச் சூழலில் நீங்கள் "எப்படி ஒரு வீடு கூட இல்லாமல் ஓட்டலில் தங்கியிருந்தோம்" என்று நடிகையர் திலகம் அவர்கள் திறமையை மிஞ்சும் விதமாகக் குரலை தாழ்த்தி, உதடுகள் துடிக்க, வரும் கண்ணீரை அடக்க முயல்வது போலெல்லாம் ஒரு சாகஸம் செய்திருக்கிறீர்கள்!

ஒரு வீடு இல்லாமல் இத்தனை குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு போய் கனடா நாட்டில் ஒரு நட்சத்திர விடுதியில் நாட்கணக்கில் தங்கக்கூடியவருக்கு எவ்வளவு பண வலிமை இருக்கும் என்று கொஞ்சம் அறிவு உள்ளவன் கூட யோசிப்பான் என்று உங்களுக்குத் தோணலையா? இவ்வளவு அப்பட்டமாகப் பொய் பேசினால் அசிங்கமாகி விடுமே என்றுகூட உங்களால் சிந்திக்க முடியலையா?

எதற்காக தேவையற்ற இந்தப் பொய் நாடகம்? அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து? வேதத்திலுள்ள நல்ல செய்திகளை மட்டும் நீங்கள் பேசினால் போதும்; உங்களுடைய பொய்சாட்சிகள் வேண்டாம்!

வீடு வாங்கிய கதையும், கார் வாங்கிய கதையும், இந்த அம்மா விடுற கதைகளையும் கேட்கக் கேட்கக் கொதிக்கிறது என்று பல கிறிஸ்தவ விசுவாசிகள் புலம்புகிறார்கள். தமிழ்க் கிறிஸ்தவச் சமூகமே அவமானத்தில் குறுகி நிற்கிறது.

உங்கள் குடும்பத்தின் உண்மையான பின்னணியை அக்குவேறு ஆணிவேறாகப் பட்டியலிடக் காத்திருக்கின்றனர் பலர். அது கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் மட்டுப்படுத்திவிடும் என்கிற ஒரே காரணத்துக்காக அமைதி காக்கின்றனர். கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்க முயல்கிற பல கோமாளிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்க உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது. நற்செய்தியைப் பரப்பவேண்டிய பொறுப்பிலுள்ள நீங்கள் ஏன் இப்படிப் பொய்ச்செய்தியைப் பரப்பி பணம் பறிக்க முயல்கிறீகள்?

மூத்த தினகரன் தொடங்கிய அந்த நல்ல பணியை, உங்களுக்கென்று கொடுக்கப்பட்டிருக்கிற ஊழியத்தை கொஞ்சமேனும் உண்மையுடனும், மனச்சான்றுடனும் செய்ய முற்படுங்கள். இருக்கிற பணம் போதும். இதற்கு மேலும் ஏன் இப்படி வெறிபிடித்து அலைகிறீர்கள்? மக்களின் சாபத்துக்குக் கூட நீங்கள் தப்பித்து விடலாம். ஆண்டவரின் சினத்துக்கு ஆளாகிவிடாமல் கொஞ்சம் திருந்திச் செயல்படப் பாருங்கள்.

பலர் இன்னமும் உங்களை நம்புகிறார்கள். அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதா, உங்களை நினைத்து வேதனைப்படுவதா என்று புரியவில்லை!' என ஆதங்கப்பட்டுள்ளார்.