Skip to main content

சத்யராஜ் மகளின் புதிய இயக்கம்!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

divya

 

பிரபல ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். உலகின் மிகப் பெரிய உணவுத் திட்டமான அக்‌ஷய பாத்திராவின் விளம்பரத் தூதுவராக இருக்கும் இவர், பல மருத்துவ முறைகேடுகளையும், நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

 

தற்போது கரோனா சமயத்தில் மக்கள் எப்படி மருந்துகளை வாங்க வேண்டும் என்பதை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், இந்தச் சமயத்தில் விவசாயிகளுக்கு நேரடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று திவ்யா சமீபத்தில் விவசாய அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். 

 

திவ்யா ஊட்டச்சத்து துறையில் செய்த சேவைகளை அங்கீகரித்து அமெரிக்காவின் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. டாக்டர் பட்டம் பெற்றவர்களைக் கௌரவிக்க அமெரிக்காவில் நடைபெறவிருந்த விழா கோவிட் 19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் டாக்டர் பட்டம் பெற்றது குறித்து திவ்யா கூறுகையில், “அமெரிக்க சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் செல்வின் குமார் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் புத்திசாலி மாணவி கிடையாது ஆனால் கடின உழைப்பாளி. 'அறிவாளியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதுதான் சிறந்தது' என்று அப்பா சொல்லியிருக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கை வசதி உள்ளவர்களுக்குதான் என்பது நியாயம் கிடையாது. தமிழ் நாட்டில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில் ஒரு இயக்கம் ஆரம்பிக்க உள்ளேன். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களும் கரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும் உணவு தேவை” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும்” - திவ்யா சத்யராஜ் வேண்டுகோள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
divya sathyaraj about hospital video

சத்யராஜின் மகளான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார். தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சேவை செய்யும் இவர், தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.  

இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு, நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளார். அதில், “இத்தகவல் என்னுடைய மருத்துவ நண்பர்களிடமிருந்து வந்தது தான். சில தனியார் மருத்துவமனைகளில் அந்த மருத்துவமனைக்கு லாபம் வருவதற்காக நோயாளிகளுக்கு தேவையில்லாத ரத்த பரிசோதனை, தேவையில்லாத ஸ்கேன்ஸ், தேவையில்லாத எம்.ஆர்.ஐ, இதையெல்லாம் பண்ண வைக்கிறாங்க. ஒரு நோயாளி குணமானதுக்கு அப்புறமும் ஒரு ரெண்டு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதுக்கப்புறம் டிஸ்சார்ஜ் பண்றாங்க. 

தனியார் மருத்துவமனைக்கு போனால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை விட பணம் காலியாகும் என்ற பயம் தான் நோயாளிகளுக்கு அதிகமா இருக்கு. எங்க அமைப்பு மூலமா சில நோயாளிகளுக்கு உதவி செஞ்சாலும், எல்லா நோயாளிகளுக்கும் உதவி செய்வது யதார்த்தத்தில் முடியாத ஒரு விஷயம். நோயாளிகளை வருவாய் உருவாக்கும் எந்திரமாக அணுகக்கூடாது. அவர்கள் அப்படி கிடையாது. தனியார் மருத்துவமனை வைத்து இருப்பவர்கள் நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என பேசியுள்ளார்.

Next Story

"மேலோட்டமா பாத்தா ஆபத்துகள் தெரியாது" - சத்யராஜ்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
sathyaraj speech in dmk stage

தி.மு.க சார்பில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா - சுய மரியாதைச் சுடர் திராவிட இனமானத் தொடர்’ எனும் தலைப்பில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் புகழரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் பா.விஜய் மற்றும் அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது சத்யராஜ் பேசுகையில், “பா. விஜய் பேசுனதில் ரொம்ப முக்கியமான விஷயம். வட நாட்டிலிருந்து மதப்புயல் தமிழ்நாட்டிற்குள் வரலாம்னு பார்க்குது. அதை விட்ராதீங்க என பேசினார். அதை விடமாட்டோம். ஏன்னா, தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும். வட நாட்டு காரவங்களுக்கு தான் அது மதப்புயல். இங்க இருக்கிறவங்களுக்கு அது மடப்புயல். இங்க இருக்கிற எல்லா மதத்தினரும் அண்ணன் தம்பி போல பழகிட்டு வரோம். எந்த மதத்தையும் சாராத என்னை போன்றவர்களும் மற்றவர்களோடு ஒன்னு மண்ணா தான பழகிட்டு இருக்கோம். இப்படி இருக்கும் போது இங்க மதத்தை வைத்து அரசியல் பண்ண முடியாது.  

எல்லாருமே ஒற்றுமையா இருக்கிறோம். இது எப்படி பண்ண முடியும். இது நீதி கட்சியினுடைய நீட்சி தான் என தோழர் அருள்மொழி சொன்னாங்க. குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து பள்ளிகூடத்தை ராஜாஜி மூடினார். மூடுவதற்கு முன்னாடி யார் திறந்தாங்க என்பதை அருமையாக சொன்னாங்க, நீதி கட்சி திறந்து வத்த பள்ளி அது. நீட் தேர்வுக்கு முன்னாடியே பெரிய கேட் அந்த காலத்தில் போட்டிருக்காங்க. அது சரியா தவறா என தெரியவில்லை. நீதி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி, மெடிக்கல் காலேஜ் சேருவதற்கு சான்ஸ்கிரிட் தெரிஞ்சிருக்கனும். இதை விட சூப்பர் காமெடி யாருமே பண்ண முடியாது. மெடிக்கல் காலேஜுக்கும் சமஸ்கிருதத்துக்கும் என்ன சம்மந்தம். அப்படி ஒரு திட்டம் வைத்தால் தான் நம்ம புள்ளைங்கெல்லாம் சேர முடியாது. இப்போ அதே திட்டத்தை நீட் என கொண்டு வராங்க. நம்மளை படிக்க விடக்கூடாதுன்னு கங்கனம் கட்டிக்கிட்டு எதையோ பண்றாங்க. ஆனா நம்ப படிச்சிகிட்டே இருக்கோம். இன்னைக்கு எல்லா இடத்துலையும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவங்க பெரியளவில வந்துட்டாங்க. அது தான் திராவிட மாடல் ஆட்சியின் மிகப் பெரிய சாதனை” என்றார். 

மேலும் “பாம்பேவுக்கு ஷூட்டிங்கிற்காக இப்போது போனேன். அங்கு பீப் ஸ்டாலே கிடையாது. அப்போ... எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என முடிவெடுக்க வேண்டியது நான் தானே, நீ எப்படி முடிவெடுக்கலாம். இவ்வளவு ஆபத்து இருக்கு. மேலோட்டமாக பார்த்தால் தெரியாது. இங்க இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும், ஜாதியை சேர்ந்தவர்களும் ரொம்ப ஒத்துமையா இருக்கோம். அது சீர்குலைந்து போகக் கூடாது. நாம் முன்னோக்கி தான் போகணும்” என்றார்.