Advertisment

“தமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது”- நடிகர் ராஜ்கிரண் காட்டம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளைத் திறந்ததாகக்கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisment

கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும், அரசின் விதிமுறைகளின்படி, குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது இந்தச் சம்பவத்திற்குப் பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடம் பவ்யம் காட்டி, சலாம் போடும்காவல் துறையினரில் ஒரு பகுதியினர், சாமானிய மக்களிடம், அத்துமீறி, அராஜகத்தின் உச்சத்துக்கே சென்று விடுகின்றனர்.

இவர்களுக்கு பக்கபலமாக, சான்றிதழ் கொடுக்க வேண்டிய மருத்துவர்களும், சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டிய நீதிபதிகளும், சிறையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய சிறைத்துறை அதிகாரிகளும், தங்களின் கடமைகளை மறந்து, உடந்தையாகி விடுகிறார்கள்.

Advertisment

இதற்கு, அவர்களுக்குச் சட்டம் தெரியாதது மட்டுமல்ல, அப்படியே ஏதாவதொன்றுஆனாலும், அரசியல்வாதிகளின் தயவால், சட்டத்தை தம் போக்குக்கு வளைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணமும் தான், இம்மாதிரியான கயமைத்தனங்களுக்கு மூல காரணம்.

சாத்தான் குளம் சம்பவத்துக்கும் இதுதான் அடிப்படை. இதைப் போன்ற பல சம்பவங்கள் நடந்திருந்தாலும், எதிலும் அவர்கள் தண்டிக்கப்படாததால் ஏற்பட்ட குருட்டுத் தைரியம்தான், அவர்களை எல்லை மீறி போக வைக்கிறது.

அதனால்தான், "குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் அடிப்படையில் கைது செய்து, அவர்களை நீதி மன்றத்தில் நிறுத்துவதுதான் நம் வேலை" என்பதை இவர்கள் மறந்து பல காலங்களாகிவிட்டன.

சாத்தான் குளம் படுகொலைகளுக்குப் பின்பு, காவல்துறையின் மிக உயர்ந்த பொறுப்புக்களில் இருக்கும், பல நேர்மையான அதிகாரிகள், இவர்களின் தவறுகளைச்சுட்டிக்காட்டி, "காவல் துறையினரின் வேலை என்ன, அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்" என்பதைத் தெள்ளத்தெளிவாக அறிவுறுத்தி, பேட்டிகள் கொடுத்த பின்பும், கீழ்மட்டத்திலுள்ளவர்கள் அதை மதிக்காமல், சமூக வலைத்தளங்களில் மீண்டும் திமிர்த்தனமாக பதிவுகள் இடுவதைப் பார்க்கும் பொழுது, தமிழக காவல் துறை, யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதை, ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.

http://onelink.to/nknapp

சாத்தான் குளத்தில் படுகொலை செய்யப்பட்ட, தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரின் ஆத்மாவும், கருணை மிகுந்த இயேசுபிரானின் நிழலில் இளைப்பாறி அமைதியடையவும் அவர்களை அநியாயமாக இழந்து தவிக்கும், அவர்களின் குடும்பத்தினரும், சொந்தபந்தங்களும், நண்பர்களும், மீள முடியாத வேதனையிலிருந்து மீண்டு வரவும், இந்தப் படுகொலைகளுக்குநீதி வேண்டியும், எல்லாம் வல்ல இறைவனிடம் கண்ணீர் மல்க பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

actor Rajkiran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe