
பழம்பெரும் ஹிந்தி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனும், நடிகர் ரன்பிர் கபூரின் தந்தையுமான நடிகர் ரிஷி கபூர் கடந்த 2018- ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். பின்னர் மும்பையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 67 வயதான ரிஷி கபூருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை ரிஷி கபூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக அவருடைய இறுதி அஞ்சலி உடனடியாக நடைபெற்று தகனம் செய்யப்பட்டது. பலரும் சமூக வலைத்தளங்களின் மூலமாக அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நடராஜன் ரிஷி கபூரின் நினைவு குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், “ஆஜ் கல் என்னும் படத்தில் நான் வேலை செய்தபோது ரிஷி கபூர் ஒரு பார்டிக்கு என்னை அழைத்தார். அப்போது அவருடைய மனைவி என்னிடம் சாதாரனமாக தமிழ் பேசினார். ரிஷி கபூர் என்னிடம் வெறும் ஹிந்தி மட்டும் கற்றுக்கொண்டு ரிஜினலாக இருக்கப் பிடிக்காது என்றார். தமிழ்நாடு குறித்து பேசுகையில், ஏவிஎம் மற்றும் வாணி ஸ்டூடியோஸ் என்னுடைய இரண்டாவது வீடு என்றும் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.