புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும் அரசிற்கும் இடையே நடைபெற்ற பலகட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, இரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நீடித்து வருகிறது. இதற்கிடையே, குடியரசு தினத்தன்று நடைபெற்ற ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது.
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலகம் முழுவதும் இருந்து பல்வேறு குரல்கள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக, பாடகி ரிஹானா, நடிகை மியா கலிஃபா உள்ளிட்ட சிலர் தெரிவித்த கருத்துகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தன. அதே நேரத்தில், பிறநாட்டுப் பிரபலங்கள் இந்த விவகாரத்தில் கருத்து கூறுவதற்கு எதிராக இந்தியப் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். சச்சின், விராட் கோலி உள்ளிட்ட சிலர் பதிவுசெய்த கருத்துகள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றது.
இந்த நிலையில், இது தொடர்பாக நடிகை டாப்ஸி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையைப் பாதித்தால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையைப் பாதித்தால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையைப் பாதித்தால், உங்கள் மதிப்பை வலுப்படுத்த உழைக்க வேண்டுமே தவிர, மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்பவராக மாறக்கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை டாப்ஸியின் துணிச்சலான இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.