Skip to main content

பாரதிராஜா மீது கோபமான தயாரிப்பாளர்கள்... தயாரிப்பாளர் டி.சிவா அறிக்கை!

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

t siva

 

ஏற்கனவே செயல்பட்டு வந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ஒருசில பிரச்சனைகளால் செயல்படாமல் இருக்கிறது. இதனால் தற்போது படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து 'தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர். படம் தயாரிப்பு, பட வெளியீடு, ஃபைனான்ஸ் சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கவே இந்தப் புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

 

இந்தச் சங்கத்தின் தலைவராக இயக்குனர் பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அண்மையில் இச்சங்கம் சார்பாக தலைவர் பாரதிராஜா அறிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

 

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா சென்னையில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாரதிராஜா, டி.சிவா, தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு, தனஞ்ஜெயன், சுரேஷ் காமாட்சி, லலித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

இதனைத் தொடர்ந்து இச்சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "இச்சங்கத்தின் தலைவரான பாரதிராஜா பேசுகையில், “திரையரங்க உரிமையாளர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்றால் என்ன பண்ண முடியும். படங்கள் திரைக்கு வரவேண்டும் என்றுதான் நாங்கள் ஆசைப்படுகிறோம். நீங்கள் அடாவடித்தனமாக சில விஷயங்கள் பண்ணும்போது, வேறு வழிகள் இருக்கின்றன. தொழில் சுதந்திரம் என்பது எங்களுக்கு உண்டு. இந்தப் பொருளை இவர்களுக்குத்தான் விற்கவேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. என்னுடைய பொருளை யாருக்கு வேண்டுமானாலும் விற்பேன். வாங்குகிறவர்கள் வாங்குவார்கள். இல்லையென்றால் எப்படி விற்க வேண்டும் என்று தெரியும்” என்று தெரிவித்தார். மேலும், தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் ஒப்பிட்டு, “வலுவுள்ள 100 பேர் பயில்வான் மாதிரி, 1000 பேர் நோஞ்சான்கள் மாதிரி இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

 

இதனால் கடுப்பான மற்ற தயாரிப்பாளர்கள் பாரதிராஜா அப்படிக் கூறியது தவறு, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். இதற்கு விளக்கமளித்து பாரதிராஜா ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். ஆனாலும், பல தயாரிப்பாளர்கள் கோபத்துடன் பாரதிராஜா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆடியோ வெளியிட்டு வருகின்றனர். 


இந்நிலையில் பாரதிராஜாவுக்கு ஆதரவாக நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கச் செயலாளர் டி.சிவா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “நேற்றைய தினம் இயக்குனர் இமயம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜாவை விமர்சித்து சில பதிவுகள் வந்தன. குறிப்பாக 'நோஞ்சான்' என்ற வார்த்தைப் பிரயோகத்தைத் தவறாக மற்ற சங்கத்தினர் பற்றிக் குறிப்பிட்டு விட்டார் என்ற குரல்கள்!

 

அவரைத் தெரிந்தவர்களுக்கும், அவரை நெருக்கத்தில் பழகியவர்களுக்கும், அவருடன் பணி புரிந்தவர்களுக்கும் தெரியும் அவர் ஒரு நேர்மையான அக்னி மனதுக்காரர் என்று!

 

எங்கெல்லாம் சினிமாவுக்கு எதிரான நிகழ்வுகள் நடக்கின்றதோ, எங்கெல்லாம் அப்பாவி சினிமா ஆட்கள் பாதிக்கப்படுகிறார்களோ, எங்கெல்லாம் அறியாமையில் சினிமா வியாபாரம் களவு போகின்றதோ, எங்கெல்லாம் சினிமா தயாரிப்பாளர்கள் நசுக்கப்படுகிறார்களோ... அங்கெல்லாம் அவரின் குரல் உயர்ந்திருக்கிறது.

 

தன் துறையின் மற்ற நண்பர்களுக்காக அவருடைய ஆதரவுக் கரம் எப்போதுமே நீண்டு அரவணைத்திருக்கிறது. இப்போதும் அதுதான் நிகழ்ந்தது. நோஞ்சான் என்பது வலுவற்றவர்களின் குரலற்ற நிலையினை சுட்டிக் காட்டுவது. அவர் எப்போதுமே யாரையும் நையாண்டி செய்ததில்லை. உணர்ச்சி கொண்ட, உதவி செய்யும் கலைஞன்! சிறுமை கண்டு பொங்கும் சீற்றம் கொண்டவர்.

 

Ad

 

சிறுபடத் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வியாபாரம் செய்ய வழி தெரியாமல், வியாபார விபரங்கள் பிடிபடாமல், எப்படி தியேட்டருக்குப் படத்தைக் கொண்டு செல்வது என்ற விஷயம் புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையினைக் கண்டு எத்தனை இடங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறார்..?

 

எல்லாப் பேட்டிகளிலும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் மனது, அன்பை வெளிப்படுத்தும் மனது, அதிகாரத்தை எதிர்க்கும் மனது, சக தோழர்களுக்கு நன்மை செய்யத் துடிக்கும் மனது, வறுமை கண்டு இறங்கும் மனது..!

 

வெளிவர முடியாமல் தவிக்கும் 80 சிறிய படங்களை தியேட்டர்காரர்கள் ஏன் திரையிட ஆர்வம் காட்டவில்லை? என்ற கேள்வியைக் கேட்ட அதே பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது தொக்கி நின்ற வார்த்தையே நோஞ்சான் என்பது.

 

ஃபெஸ்டிவல் நேரங்களில் சிறிய படங்களை மட்டுமே திரையிட வேண்டும், மற்ற நேரங்களில் பெரிய நடிகர்களின் படங்களைத் திரையிட்டால் சிறிய படங்கள் பிழைத்துக் கொள்ளும், பெரிய படங்களும் குறைவில்லாமல் ஓடும், திரையரங்கங்களும் நல்ல லாபம் ஈட்டும் என்பதை முதன்முதலில் சொன்னதே இவர்தான்.

 

தயாரிப்பாளர்கள் நோஞ்சான்களா..?

 

ஆம்..! இந்தத் தமிழ்த் திரைப்பட உலகில் 80 சதவீதத் தயாரிப்பாளர்கள் நோஞ்சான் தயாரிப்பாளர்கள்தான். அவர்களுக்காகக் குரல் கொடுக்க வந்திருக்கும் ஒரு மூத்த கலைஞன், கூட்டுக்குள் சுருங்கியிருந்த சினிமாவுக்கு எல்லைகளற்ற வான்வெளியைத் திறந்து காண்பித்தவர்.

 

அவர் அடைந்த புகழுக்கும், பெருமைக்கும் சும்மா அமர்ந்திருந்து வேடிக்கை மட்டும் பார்த்திருக்கலாம். உணர்ச்சிவசப்பட்ட கலைஞன், மனதில் ஈரமுள்ள படைப்பாளி அப்படிச் சும்மா உட்காருவதில்லை. குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்க வீறுகொண்டு வந்திருக்கும் அவரை நாம் சரியான வகையில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

சமீபத்தில் நடிகர் சூர்யா ஐந்து கோடி ரூபாயை வழங்கப் போவதாக அறிவித்தபோது, உடனடியாக சூர்யாவைத் தொடர்பு கொண்டு 300 தயாரிப்பாளர்கள் மிகுந்த சிரமத்திலிருக்கும் நிலையினை எடுத்துக் கூறி, அவர்களுக்கு ஆளுக்கு ரூ.10,000/- வீதம் கொடுக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை வைத்தவர். அதற்கு சூர்யாவும் சம்மதம் தெரிவித்திருந்தார்.

 

ஆனால், அந்த 30 லட்ச ரூபாய் பணம் தயாரிப்பாளர்களுக்கு வேறு வகையில் செலவு செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் கோரிக்கை வைத்தபோது, குழப்பத்தில் யோசித்த சூர்யாவிடம் 'எதுவானாலும் தயாரிப்பாளர்களின் நன்மைக்கே' என்று சொல்லி அன்புக் கட்டளையிட்டவர். முன்னூறு தயாரிப்பாளர்களுக்குச் சேர்ந்திருக்க வேண்டிய முப்பது லட்சம் ரூபாய் இப்போது தயாரிப்பாளர்கள் சங்க நிதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

 

தேர்தல் சாங்கியத்திற்காக ஒற்றை வார்த்தையைத் தனித்துத் திரித்து, தயாரிப்பாளர்களைப் பலமிழக்கச் செய்வது நல்லதல்ல. எந்தச் சங்கமும் அவருக்குத் தேவையில்லை. ஆனால், சங்கத்திற்குத்தான் அவர் தேவை. இதைப் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எஞ்சியிருக்கும் ஒருசிலரும் விரைவில் புரிந்துகொள்ள வேண்டும்.

 

Nakkheeran

 

தயாரிப்புத் துறை பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தயாரிப்பாளர்களின் லாபத்தையெல்லாம் 'சேவை' என்ற பெயரில் யார் யாரோ கூறு போட்டுக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், தயாரிப்பாளர்கள் தங்கள் உரிமைகளைப் படம் தயாரிக்கும்போதும், வெளியிடும்போதும் பேசவே முடியாமல் மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் நிலையில், நிஜமாகவே பெரும்பாலான படங்கள் நிச்சயம் லாபம் கொடுக்கும் என்பதை உறுதிப்படுத்த முனைந்திருக்கும் இப்போது நம் அனைவருக்கும் தேவை ஒற்றை வார்த்தை..!

 

அது...

 

ஒற்றுமை!

 

ஆம்...ஒற்றுமை.

 

முன்னேர் போல அவரது ஒரு குரல் ஓங்கி ஒலிக்க, அதன் பின்னால் ஆயிரம் குரல்கள் எழுப்பப்பட்டால் திரைக் காடே அதிரும். அந்தக் கர்ஜனைதான் நம் வியாபாரத்தை நேர்படுத்தும், நம் லாபத்தை மீட்டெடுக்கும்!

 

எல்லோரும் பாரதிராஜா என்ற கலைஞனுடன் ஒன்றிணைந்து நமக்கான வியாபாரத்தை உறுதிப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தயாரிப்பாளர்களின் நிலைமை என்ன ஆவது?... ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவிற்கு தயாரிப்பாளர் டி. சிவா எதிர்ப்பு!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

T siva

 

மத்திய அரசு கடந்த ஜூன் 19ஆம் தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை வெளியிட்டது. அந்த மசோதா வெளியானது முதலே இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு திரைக்கலைஞர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். குறிப்பாக சட்டத்திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்தை தேவைப்பட்டால் மத்திய அரசு மீண்டும் தணிக்கை செய்ய முடியும் எனும் புதிய விதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக 1,400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில், தயாரிப்பாளர் டி. சிவா ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவைக் கண்டித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேச விரோத கருத்துகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எப்போது வேண்டுமானாலும் தடை செய்யலாம். வேறு எந்தக் காரணத்திற்காகவும் தணிக்கை செய்த பிறகு அதைத் தடை செய்யும் உரிமை யாருக்கும் இருக்கக்கூடாது. அப்படி ஒரு சட்டம் வந்தால் பணம் போட்ட தயாரிப்பாளர்களின் நிலை எந்த நேரத்திலும் கேள்விக்குறியாகிவிடும். இது கருத்துச் சுதந்திரம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, மொத்த முதலீடும் போட்டு படத்தை வெளியிட்டபின் அந்தப் படம் தடை செய்யப்பட்டால் தயாரிப்பாளரின் நிலைமை என்ன ஆவது. எனவே புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

Next Story

"கரோனாவுக்கு என் உடன்பிறவா சகோதரா உன்னை பறிகொடுத்துவிட்டேன்" - டி சிவா உருக்கம்!

Published on 29/05/2021 | Edited on 29/05/2021

 

vdvsVS

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இதற்கிடையே கரோனா இரண்டாம் அலையால் சில மாதங்களாகவே விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன், பவுன்ராஜ், அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா, நிதீஷ் வீரா உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்துவருவது மக்களிடையே கவலையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் நடிகரும், பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட், கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர், இன்று (29/05/2021) சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60. இவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில், தயாரிப்பாளர் டி சிவா இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... 

 

dvdzbvszd

 

"வெங்கட்.. வெங்கட்.. வெங்கட் என் வாழ்நாளில் நான் அதிகம் அழைத்த நண்பனின் பெயர். 36 வருடங்கள், ஆயிரமாயிரம் நினைவுகள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியிலும் தோல்வியிலும் உடன் இருந்தவன். அறிவாளி, எழுத்தாளன், படைப்பாளி, நடிகன், விமர்சகன் என ஒரு மினி சகலகலா வல்லவன். யார் சொல்லி கேட்காவிட்டாலும் நான் சொன்னால் கேட்பான். ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளச்சொல்லி நான் சொல்லியும் ஊர் உறவு சொல்லியும் கேட்கவில்லை. அதுதான் ஆஜாணுபாகுவாக ஆரோக்யமாக இருந்த உன்னை கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி எங்களிடமிருந்து பிரித்துவிட்டது மட்டுமல்ல உன் எதிர்கால படைப்புகளை, திட்டங்களை, கனவுகளையும் அழித்துவிட்டது. 

 

சினிமா மீதுதான் எத்தனை காதல் உனக்கு. ஆதாயமே இல்லாமல் இதையே சுற்றி சுற்றி வந்து சேவை செய்தாய். நட்பே வாழ்க்கை என நண்பர்களை சுற்றியே வாழ்ந்தாய். நட்பும் தமிழ் சினிமாவும் என்றும் உன்னை மறவாது நண்பனே. கரோனாவுக்கு என் உடன்பிறந்த சகோதரணை பறிகொடுத்தேன். இன்று உடன்பிறவா சகோதரன் உன்னையும் பறிகொடுத்துவிட்டேன். வெங்கட், மறக்க முடியாதடா உன்னை. மன்னித்துவிடு வெங்கட்டா. இந்த கரோனாவை எதிர்த்து உன்னை காப்பாற்ற உன் மனைவியும், உறவுகளும் நண்பர்களும், நீ நேசித்த மொத்த தமிழ் சினிமாவும் உனக்காக அப்போலோ மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு போராடியது. ஆனாலும் உன்னை மீட்க முடியவில்லையடா வெங்கட். கரோனா காலத்திலும் கடுமையாக உழைத்துவிட்டாய் வெங்கட். தெய்வத்தின் திருவடியில் நீ இளைப்பாரு. உன்னை தினம் தொட்டு வணங்கிக்கொள்கிறேன்.

டி சிவா " என கூறியுள்ளார்.