பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மும்பையில் இருக்கும் அந்த அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.
மும்பையில் இருக்கும் டி-சீரிஸ் நிறுவனத்தின் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைதொடர்ந்து அந்த அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் பூஷன் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எங்கள் டி-சீரிஸ் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, சமீபத்தில் தெரிய வந்தது. தேசிய ஊரடங்கால் வீடு திரும்ப முடியாத எங்கள் பாதுகாப்புப் பணியாளர்கள், உதவியாளர்கள் சிலர் அலுலவகத்திலேயே தங்கியுள்ளனர்.
டி-சீரிஸ் ஊழியர்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல. இந்த சூழலைகையாள அதிக அக்கறை எடுத்துள்ளோம். தொற்று இருப்பவருக்கு ஒழுங்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலை ஏற்று எங்கள் அலுவலக கட்டிடத்தை முழுமையாக கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்துள்ளோம்.
சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக டி-சிரீஸில் நாங்கள் ஊரடங்கு விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றியுள்ளோம். அரசு சொன்னதைபோல வீட்டிலிருந்தே வேலை செய்து கொண்டிருக்கிறோம். இதுபோன்ற கடினமான சூழலில் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டியிருக்கிறோம்.
இந்த சர்வதேச தொற்று முடிவுக்கு வரும்போது டி-சீரிஸ் குடும்பத்தின் ஒவ்வொரு நபருமே ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்ய கடுமையாக முயற்சி செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.