Skip to main content

"காங்கிரஸை நம்ப நான் தயாராக இல்லை; அதனால் உங்களிடம் கேட்கிறேன்" - பிரதமர் மோடியிடம் மூன்று மொழிகளில் கோரிக்கை வைத்த டி.ராஜேந்தர்

Published on 03/02/2022 | Edited on 03/02/2022

 

t rajendar

 

இலட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர், அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், "வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிட தலைமை அனுமதிக்க வேண்டும் என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். பொங்கல் சமயத்தில் கோவில்கள், மதாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டன. ஆனால், டாஸ்மாக் கடை திறந்திருந்தது. இது என்ன கொள்கை? மத ஆலயங்களுக்கு மக்கள் வந்தால் கரோனா தொற்றிக்கொள்ளும். டாஸ்மாக் கடைகளுக்கு மக்கள் வந்தால் கரோனா தொற்றிக்கொள்ளாதா? ஆனால், உள்ளாட்சி தேர்தல் என்று சொன்னவுடன் அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டது. அப்படியென்றால் தமிழ்நாட்டைவிட்டு இந்தக் கரோனா விடைபெற்று சென்றுவிட்டதா? கட்சியின் கட்டமைப்பை வளருங்கள் என்று இலட்சிய திமுகவினரை கேட்டுக்கொள்கிறேன். 2024 நாடாளுமன்ற தேர்தல் வரும்போது என்ன செய்ய வேண்டும் என்று அப்போது சொல்கிறேன். 

 

மறைந்த கலைஞர் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக லட்சிய திமுக சார்பாக தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்தேன். அவர் வெற்றிபெற்றவுடன்  மாநில சிறுசேமிப்பு துணைத்தலைவர் பதவி தந்தார். ஈழத்தமிழர் பிரச்சனைக்காக அந்தப் பதவியையே ராஜினாமா செய்தேன். இன்று இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்றப்பட்டுள்ளது. ஒரு முட்டைக்கோஸ் 300 ரூபாய் என்கிறார்கள். ஒரு டீக்கூட குடிக்க முடியவில்லை. சிங்களவர்களும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களைவிட எங்களவர்கள் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லையா? இலங்கையில் உள்ள எங்கள் தமிழ்மக்களை காப்பாற்றுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கேட்டுக்கொள்கிறேன். 

 

பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சியை நம்ப நான் தயாராக இல்லை. அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன்" எனக் கூறினார். இந்தக் கோரிக்கையை அவர் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் வைத்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்