Skip to main content

சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்லும் டி. ராஜேந்தர்

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

t rajendar going to America today medical treatment

 

இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்தர் கடந்த 19 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் டி. ராஜேந்தருக்கு வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சை தர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதனால் மருத்துவர்களின் அறிவுரையின் படி சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதாகவும் அவரின் மகன் சிம்பு சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து டி. ராஜேந்தர் அமெரிக்க செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் டி.ராஜேந்தர் உயர் மருத்துவ சிகிச்சைக்காக இன்று(14.6.2022) இரவு விமானம் மூலம் அமெரிக்க செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு பிரபலமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. மேலும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் டி.ராஜேந்தருடன், சிம்பு மற்றும் அவரது குடும்பத்தினரும் செல்லவுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.