
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் வருகிற நவம்பர் 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது. தயாரிப்பாளர் முரளி தலைமையில் மற்றுமொரு அணி போட்டியிடுகிறது.
இச்சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் இன்று என்பதால், அனைவரும் நேரில் வந்து வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர். அப்போது, டி.ராஜேந்தரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், “பெருந்தொகை நடிகர்களுக்கு சம்பளமாகச் செல்வதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று பேசினார்.
சிம்புவிற்கு இருக்கும் பிரச்சனைகளைச் சரி செய்யத்தான் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு, தன்னுடைய மகன் சிலம்பரசனுக்கு நான் ஃபாதர். கடவுள்தான் காட் ஃபாதர். அவர் சிம்புவின் பிரச்னைகளை பார்த்துக் கொள்வார். நான் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கும் பிரச்னைகளை சரி செய்ய வந்திருக்கிறேன் என்று டி.ஆர். பதிலளித்தார்.
இன்று மாலை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது. பின்னர் வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டு 29-ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.