ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக அறியப்படுவர் சிட்னி ஸ்வீனி. குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து பின்பு நாயகியாக நடித்து அடுத்து லீட் ரோலில் நடிக்கும் அளவிற்கு உயந்தார். அதே சமயம் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வந்தார். இப்போது அமெரிக்காவின் முன்னாள் குத்துச்சண்டை வீரரான கிரிஸ்டி மார்ட்டின் பயோ-பிக் படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘கிரிஸ்டி’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை அடுத்து ‘ஹவுஸ்மெய்ட்’ என்ற படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இப்படம் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Advertisment

திரைப்படங்களைத் தாண்டி அவ்வப்போது விளம்பர படங்களில் நடித்து வரும் சிட்னி ஸ்வீனி அதன் மூலம் பேசு பொருளாகவும் ஆனார். சமீபத்தில், தன்னுடைய குளித்த நீரில் ஒரு புதிய வகை சோப்பை உருவாக்கியுள்ளதாக அறிவித்திருந்தார். அதாவது மரப்பட்டையின் பிசின் உள்பட சில பொருட்களுடன், தான் குளித்த நீரையும் சேர்த்து ஒரு சோப் உருவாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். இது வினோதமாக பார்க்கப்பட்டு பேசு பொருளாகவும் ஆனது. அதே போல் பிரபல ஆடை நிறுவனமான ‘அமெரிக்கன் ஈகிள்’ நிறுவனத்தின் ஜீன்ஸ் விளம்பரத்தில் நடித்திருந்தார். இதில் அவர் பேசிய வசனம், வெள்ளை மேலாதிக்கத்தை, புனிதப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தது. இதனால் கருப்பினத்தரவர்கள் உள்பட பலரும், இந்த விளம்பரம் இன வெறுப்பை முன்வைப்பதாக சிட்னி ஸ்வீனிக்கும் அதன் விளம்பரத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

Advertisment

இந்த நிலையில் சிட்னி ஸ்வீனி, பாலிவுட்டில் நடிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தியாவில் பாலிவுட்டில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படத்தில் சிட்னி ஸ்வீனியை நடிக்க வைக்க அப்படக்குழு முயற்சித்து வருவதாகவும் இதற்காக 45 மில்லியன் பவுண்டு, இந்திய ரூபாய் மதிப்பின்படி 530 கோடி சம்பளம் ஆஃபர் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் ஒரு இந்திய பிரபலத்தை காதலிக்கும் இளம் அமெரிக்க நட்சத்திரமாக ஒரு கதாபாத்திரம் இருப்பதாகவும் அதில்தான் சிட்னி ஸ்வீனியை நடிக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நியூ-யார்க், பாரிஸ், லண்டன் மற்றும் துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் சிட்னி ஸ்வீனி இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் தகவலில் சொல்லப்பட்ட படம் எந்த படம் என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.