Skip to main content

சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற தமிழ் குறும்படம் 'ஸ்வீட் பிரியாணி'

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

sweet briyani short film screened at goa filmfest

 

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து இந்திய சர்வதேச திரைப்பட விழாவை ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இவ்விழா வரும் 28ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இத்திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ள படங்களின் பட்டியல் இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில், மொத்தம் 25 திரைப்படங்களும், 20 குறும்படங்களும் இந்த திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டிருந்தன. அந்தவகையில், தமிழில் இருந்து வினோத் ராஜ் இயக்கிய 'கூழாங்கல்' திரைப்படமும், ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய 'ஸ்வீட் பிரியாணி' குறும்படமும் இவ்விழாவில் திரையிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கிய 'கூழாங்கல்' திரைப்படம், இந்தியா சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படமாகும்.

 

ad

 

அதேபோல தமிழில் இருந்து தேர்வாகியுள்ள குறும்படமான 'ஸ்வீட் பிரியாணி'யை ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்க, பிராங்க் புகழ் ஆர்.ஜே. சரித்திரன் நாயகனாக நடித்திருந்தார். உணவு டெலிவரி பாயின் ஒருநாளை அழுத்தமாகவும் சுவாரசியமாகவும் பேசியிருந்த 'ஸ்வீட் பிரியாணி' குறும்படத்தில், சென்னை பெருநகரத்தில் படிந்துள்ள சாதிய ஆதிக்க மனநிலையையும் இயக்குநர் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். தமிழிலிருந்து இவ்விழாவுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஒரே குறும்படம் என்ற பெருமையோடு, சினிமா ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் இன்று (24.11.2021) கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த பார்வையாளர்கள் மத்தியில் திரையிடப்பட்ட இந்தக் குறும்படம், திரையிடலின் முடிவில் பார்வையாளர்களிடமிருந்து மிகப்பெரிய அப்ளாஸையும் அள்ளியது. படம் முடிந்த பிறகு பல்வேறு தரப்பினரும்  இயக்குநருக்கு தங்களது பாராட்டுகளை நேரில் தெரிவித்தனர். இன்று நடைபெற்ற இவ்விழாவில் இப்படத்தின் இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி, ‘கூழாங்கல்’ திரைப்பட இயக்குநர் வினோத் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்