
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமா துறையும் முடங்கியுள்ள நிலையில் திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். மேலும் இவர்கள் மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை சமூகவலைத்தளம் மூலமும், அறிக்கைகள் மூலம் ஏற்படுத்தி வரும் நிலையில் 'சுப்ரமணியபுரம்', 'வடகறி' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஸ்வாதி ரெட்டி தனது பெயரில் உலவி வரும் போலி கணக்குகள் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"ஒரு வாரம் கழித்து இப்போதுதான் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு வந்தேன். (@SwathiReddyOffl) என்ற ட்விட்டர் பக்கம் என்னுடையது அல்ல. நான் ட்விட்டரில் இல்லை. எப்போதும் வர மாட்டேன். நான் ஃபேஸ்புக்கிலும் இல்லை. 2011- ஆம் ஆண்டே அந்தக் கணக்கை நீக்கிவிட்டேன். அது ஒரு பக்கம் இருக்கிறது ஆனால் அதை வேறொருவர் நிர்வகிக்கிறார். அது இப்போது செயல்படவில்லை. நான் ஏன் இன்னமும் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை இந்த விஷயத்தைச் சொல்ல அது உதவியாய் இருப்பதால் என்று நினைக்கிறேன். இந்தப் போலிக் கணக்கைப் பற்றி என் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி. இந்தக் கணக்கு மீண்டும் மீண்டும் என் கவனத்துக்கு வந்து கொண்டே இருக்கிறது. (நீங்கள் யார் பாஸ்?) உங்களிடம், ட்விட்டரும், சக்தியும் இருந்தால் அந்தக் கணக்கைப் பற்றி புகார் அளியுங்கள்.
கடந்த காலத்தில் என்னைப் பற்றி என்ன பதிவு இடப்பட்டிருக்கிறது என்பதைக் கட்டுப்படுத்த என்னிடம் எந்த அதிகாரமும் இல்லை. இது முக்கியமும் இல்லை, பெரிய விஷயமும் இல்லை, இப்போது நான் முக்கியமானவளும் இல்லை. ஆனால் வீட்டில் இருக்கும் எனக்கு இந்தப் போலிகள் சோர்வைத் தருகின்றன. அசலாக என்னாலேயே இணையத்தில் இருக்க முடியாமல் போகும்போது எப்படி ஒருவருக்கு என்னைப் போல போலித்தனமாக இணையத்தில் இருக்கும் அளவுக்குப் பொறுமை இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. கணக்குகள், கட்டுரைகள், பதிவுகள், உறவுகள், தோற்றங்கள், நேர்மறை எண்ணங்கள் என எல்லாவற்றிலும் போலித்தனம். என்னை மீண்டும் 90-களுக்கு எடுத்துச் செல்லுங்கள். ஒரு லேண்ட்லைன் உரையாடலே தரமானதாக இருந்தது. மழையால் மட்டுமே மின்சாரம் போனது. சின்ன ஐஸ்க்ரீம், முட்டை பஃப் போதும் நண்பர்களுடன் உரையாட, பொழுதுபோக்குக்கு தூர்தர்ஷன் மட்டுமே போதுமானதாக இருந்த காலம் அது" எனப் பதிவிட்டுள்ளார்.