/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/259_11.jpg)
அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘லப்பர் பந்து’. தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன், டி.எஸ்.கே. உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 20ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் தமிழரசன் பச்சமுத்து, ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, டி.எஸ்.கே. உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சுவாசிகா பேசுகையில், “16 வருடத்திற்கு முன்பு தமிழில் நான் முதல் படம் பண்ணினேன். அப்போது பல கனவுகளுடன் இங்கே வந்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அதனால் கேரளாவுக்கு சென்று விட்டேன். இத்தனை வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் இப்படி ஒரு படம் எனக்கு கம்பேக் ஆக கிடைத்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு இரண்டாவது இன்னிங்ஸ் போல இதை உணர்கிறேன். தயாரிப்பாளர், இயக்குனர் யாருக்கும் என்னைப் பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனாலும் எப்படி என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
16 வயதில் உடைந்து போன அந்த கனவு இப்போது மீண்டும் நனவாக துவங்கியுள்ளது. இன்னும் நிறைய தமிழ் படங்கள் பண்ண வேண்டும். இங்கேயே வீடு கட்டி செட்டில் ஆக வேண்டும். தினேஷுடன் ஏற்கனவே குக்கூ படத்தில் இணைந்து நடிக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து நான் அவரது ஜோடியாக நடிக்கிறேன். அதுவும் ஒரு சந்தோஷம். எனக்கு ஒரு புதிய வாழ்க்கை கொடுத்ததற்கு மொத்த படக்குழுவிற்கு நன்றி” என்று கூறினார்.
தமிழில் 2009ல் வெளியான வைகை படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் கேரளாவை சேர்ந்த சுவாசிகா. பின்பு கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் என 2018 வரை சில படங்களில் நடித்தார். பின்பு மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி தமிழில் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லப்பர் பந்து படத்தில் நடித்து பிரபலமடைந்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)