/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/221_25.jpg)
கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எமகாதகன்’. பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப் படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ‘எமகாதகன்’ படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி. சேகர், தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் திருமலை, நடிகர் சௌந்தர்ராஜன் மற்றும் இயக்குநர் சரவணசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் எஸ்.வி. சேகர் பேசும்போது, “வெற்றிகரமான மனிதர்களை எமகாதகன் என சொல்வது உண்டு. அந்த வகையில் இந்த படத்தின் டைட்டில் நெகட்டிவ் ஆக இல்லாமல் அதேசமயம் அனைவரும் புழங்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. இன்று சின்ன படங்கள் தியேட்டருக்கு வருவது சிரமமாக இருக்கிறது. பெரிய படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று சின்ன படங்களையும் தயாரித்து ஒரே நேரத்தில் திரைக்கு கொண்டு வரவேண்டும். அப்போதுதான் சின்ன படங்கள் மீதும் கவனம் திரும்பும்.
திரைப்படங்கள் சென்சார் செய்யப்பட்டிருந்தால் அந்த படங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்கிற ஒரு விதி இருக்கிறது. அதை தமிழக முதல்வர் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். தியேட்டர்கள் கிடைக்காத சூழ்நிலையில், அப்படியே கிடைத்தாலும் போட்ட பணத்தை எடுக்க முடியாத சூழலில் இந்த மானியம் தயாரிப்பாளர்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும். அதேபோல தனிப்பட்ட முறையில் யூட்யூப் நடத்துபவர்களுக்கு என ஒரு நல வாரியம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் முதல்வருக்குகோரிக்கையாகவைக்கிறேன்.
படம் பார்க்க செல்பவர்கள் படத்திற்கு என்ன சான்றிதழ்கள் கொடுத்துள்ளார்கள் என்பதை கவனித்து தியேட்டர்களுக்கு குடும்பத்தை அழைத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் யு சர்டிபிகேட் பெற்ற சில படங்களுக்கு மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும்போது ஏ சர்டிபிகேட் தான் கொடுக்கப்படுகிறது. காரணம் அது சர்வதேச நிலைப்பாடு. ஆனால் சென்சார் செய்யப்படும் இடங்களில் உள்ள சில அட்ஜஸ்ட்மென்ட் காரணமாக இதுபோன்று நிகழ்கிறது. எல்லா இடத்திலும் தவறுகள் நடந்தாலும் சினிமா மற்றும் அரசியலில் அவை மிகைப்படுத்தி காட்டப்படுகின்றன” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)