Skip to main content

“இது செயலுக்கு வர வாய்ப்பில்லை...”- எஸ்.வி. சேகர் ட்வீட்!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

sv sekar

 

கரோனா அச்சுறுத்தலால் கடந்த 100 நாட்களாக சினிமா மற்றும் சின்னத்திரை ஷூட்டிங் எதுவும் நடைபெறவில்லை. மேலும், மூடப்பட்டுள்ள திரையரங்குகள் இனி எப்போது திறக்கப்படும் என்பதும் தெரியப்படவில்லை. இதனிடையே, தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கடந்த 6ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

 

இதனைத் தொடர்ந்து நேற்று தயாரிப்பாளர்கள் மட்டும் கலந்துகொண்ட இணைய வழி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெவ்வேறு அணியில் போட்டியிட்டாலும் இதில் ஒற்றுமையாக அனைவரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

 

கரோனா ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை எப்படிச் சரி செய்யலாம் என்று இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருடைய சம்பளத்திலும் 50% வரை குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

 

சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் அதிகப்படியான சதவீதத்தையும், குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் குறைவான சதவீதத்தையும் குறைக்கலாம் எனவும் ஆலோசனையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பளக் குறைப்பு குறித்து நடிகர்கள் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் என அனைத்துச் சங்கங்களிலும் பேசி முடிவெடுக்கலாம் என்று ஒருமனதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

 

இதனிடையே, இந்தத் தயாரிப்பாளர்கள் ஆலோசனை சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இன்னும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலே நடைபெறவில்லை. அதற்குள் ஒரு சிலர் எடுத்த முடிவு எப்படிச் சங்கத்தின் முடிவாகும் என்று சில தயாரிப்பாளர்கள் குரலெழுப்பி வருகிறார்கள்.

 

தயாரிப்பாளர்களின் ஆலோசனையை எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பதிவில் விமர்சித்துள்ளார். அதில், “தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் முடங்கியுள்ள வேளையில், சில பட அதிபர்களின் ஆலோசனையான இது விளம்பரத்துக்குப் பயனாகும். செயலுக்கு வர வாய்ப்பில்லை. சங்கத் தேர்தலில் நிற்கும் ஒரு அணியின் விளம்பர நடவடிக்கையே” என்று தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாதிப்புகளை மன்னிப்பினால் சரிக்கட்ட முடியாது” - எஸ்.வி. சேகர் மனுவைத் தள்ளுபடி செய்த ஐகோர்ட்

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

 court dismissed SV Shekhar's petition

 

பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி. சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்துத் தரக்குறைவாகப் பேசி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் சட்டத்தின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதியப்பட்டது.

 

அதேபோன்று கடந்த 2020 ஆம் ஆண்டு சமூக வலைத்தளப் பக்கத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறாகப் பேசியது தொடர்பாகவும் யூட்யூபில் தேசியக் கொடியை அவமதித்தது தொடர்பாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதிந்தனர். இது தொடர்பான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. 

 

இந்த நிலையில் இந்த வழக்குகளை எல்லாம் ரத்து செய்ய வேண்டும் என்று கூறி எஸ்.வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தபோது, சமூக வலைத்தளப் பதிவுகளை நீக்கிவிட்டு, அதற்காக மன்னிப்பும் கேட்டிருப்பதாக எஸ்.வி. சேகர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பு மூலம் சரிக்கட்டிவிட முடியாது. தனக்கு வந்த தகவலை ஃபார்வர்டு செய்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புக்கு முழு பொறுப்பு. எஸ்.வி. சேகர் தாக்கல் செய்த ஆதாரங்களை ஏற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை சிறப்பு நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

 

Next Story

"சாதியை தூக்கிப் பிடிங்க தப்பில்லை" - எஸ்.வி. சேகர்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

sv sekhar about caste

 

அறிமுக இயக்குநர் அஜித்குமார் இயக்கத்தில் கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜு நடிப்பில் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் 'முகை'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி. சேகர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

 

அப்போது எஸ்.வி. சேகர் பேசுகையில், "ஒரு படம் வெற்றி படமாக இருக்கலாம் அல்லது தோல்வி படமாக இருக்கலாம். தோல்வி படமாக இருந்தாலும் அது நல்ல படமாக இருக்க வேண்டும். 10 ரூபாய் போட்டு 10 கால் ரூபாய் வந்தாலும் அது வெற்றி படம் தான். ஆனால் அது நேர்மையாக இருக்க வேண்டும். நாம் என்ன செலவழிக்கிறோம் என்று நமக்கு தெரிய வேண்டும். ஏனென்றால் பாக்கெட்டில் இருந்து பணம் கொடுக்கும் ஒரே சாதி தயாரிப்பாளர் சாதி. மற்ற அனைவரும் பணம் வாங்கக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் கூடுதல் பொறுப்போடு இருக்க வேண்டும். நேர்மையாக சம்பாதித்தால் அந்த பணம் நம்மிடம் இருக்கும். 

 

சினிமாவில் ஒழுக்கத்தை தாண்டி நிறைய விஷயங்களை காட்டிக்கிட்டே இருக்கிறோம். முன்பெல்லாம் கடவுளை பற்றி ஆரம்ப காட்சி இருக்கும். இப்போதெல்லாம் டாஸ்மாக் காட்சி தான் இருக்கிறது. வெறும் பணத்துக்காக சினிமா எடுத்து சமூகத்தை கெடுப்பேன் என்றால் மிக மோசமான பாதிப்பு அவர்களுக்குத் தான். அதே போன்று சினிமாவில் ஜாதி ரீதியான படங்களை எடுப்பதை குறைத்து கொள்ளவும். எல்லா சாதிக்காரங்களும் படம் பார்க்க வேண்டும் என்றால் எல்லா சாதியினருக்கும் பிடித்த மாதிரி படம் எடுங்கள். சாதியை தூக்கிப் பிடியுங்கள் தப்பில்லை. அடுத்த சாதியை தவறாக பேசாதீர்கள். இந்தியா போன்று ஒரு சிறந்த நாடு எங்கேயும் கிடையாது" என்றார்.