sv sekar 1 month imprisonment in female journalist issue case

Advertisment

பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி. சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்துத் தரக்குறைவாகப் பேசி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் சட்டத்தின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் மனு தாக்கல் செய்தார். அப்போது பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தபோது, எஸ்.வி. சேகர் தாக்கல் செய்த ஆதாரங்களை ஏற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை சிறப்பு நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது எஸ்.வி சேகர் மீதானகுற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.மேலும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் எஸ்.வி சேகர் மீது வழக்கு பதிவு செய்து எஸ்.வி சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.15000 அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இதையடுத்து அபராதத் தொகையை இன்றே நீதிமன்றத்தில் எஸ்.வி சேகர் செலுத்தினார். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செல்லவுள்ளதாக தெரிவித்து அதற்கான மனுதாக்கல் செய்யப்பட்டதைத்தொடர்ந்து சிறைத்தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.