
கடந்த ஜூன் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை தொடர்ந்து அவருடைய தற்கொலைக்கு காரணம் பாலிவுட்டில் நடைபெறும் உள் அரசியல் மற்றும் வாரிசு அரசியல்தான் காரணம் என்று தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து பல பிரபலங்களை அழைத்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சுசாந்தின் காதலி என்று சொல்லப்படும் ரியா சக்ரோபாரதி மீது, சுஷாந்தின் தந்தை காவல்துறையில் புகாரளித்திருப்பது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகாரை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரில், ரியா சக்ரோபாரதி, ரூபாய் 15 கோடியை சுஷாந்தை ஏமாற்றி, வேறு ஒரு அக்கவுண்ட்டுக்கு மாற்றியுள்ளதாக அவர் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் ரியாவும் இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டு, தனது மகனுக்கு பொருளாதார ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் அழுத்தங்கள் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “2019ஆம் ஆண்டு வரை சுஷாந்திற்கு எந்த மன அழுத்தமும் இல்லை. அப்படி ஏற்பட்டிருந்தால், அவர் ஏன் அதை குடும்பத்திடம் இருந்து மறைக்க வேண்டும், இந்த விவகாரத்தில் ரியாவேதான் மருத்துவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் சொல்லிய மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளைதான் சுஷாந்த் எடுத்து கொண்டுள்ளார். அதனால் சுஷாந்திற்கு மருத்துவம் பார்த்ததாக சொல்லப்படும் மருத்துவர்கள் விசாரிக்கப்பட வேண்டும், ரியா கடைசியாக சுஷாந்திடம் இருந்து செல்லும்போது, அவரின் க்ரெடிட் கார்டு, லேப்டாப், இன்னும் சில மெடிக்கல் ஃபைல்கள் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.